கிரிக்கெட் பவுலர்கள் பந்தை எச்சில் தொட்டு மெருகு ஏற்ற வேண்டாம் : வீரர் வேண்டுகோள்

டில்லி

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் பவுலர்கள் பந்தை எச்சில் தொட்டு மெருகு ஏற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை சுமார் 60 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு அதிகம் கூட்டம் கூட வேண்டாம், ஒரு அடி தூரம் தள்ளி நின்று பேச வேண்டும்,  இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் விளையாடும் போது பவுலர்கள் பந்தை வீசும் முன்பு அதில் எச்சில் தொட்டு மெருகு ஏற்ற வேண்டும்.  இது குறித்து இந்தியக் கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார், “நான் பவுலர்கள் பந்தை எச்சில் தொட்டு மெருகு ஏற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.  அதே வேளையில் எச்சிலைப் பயன்படுத்தாமல் எப்படி மெருகேற்ற முடியும்? எனக் கேள்வி உள்ளது.

இதனால் நாங்கள் விரைவில் அவுட் ஆனால் நீங்கள் எங்களை அதற்கும் விமர்சிப்பீர்கள்.   கிரிக்கெட் அணியின் கூட்டம் நடைபெற உள்ளது.  அப்போது நாங்கள் இது குறித்த சரியான வழிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.  அதில் எது சரியானதோ அதை பின்பற்ற உள்ளோம்.

எங்கள் அணியின் மருத்துவர்கள் எடுக்கும் இறுதி முடிவை  நாங்கள் ஏற்க உள்ளோம். மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்து எங்கள் முடிவு அமையும்.   இதற்கு ஒரே எளிதான வழி அவ்வப்போது கைகளைக் கழுவுவது தான்” எனத் தெரிவித்துள்ளார்.