பந்துவீச்சு மோசடி – சுனில் நரைன் மீதான குற்றச்சாட்டு ரத்து!

துபாய்: கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள சுனில் நரைன் மீது சுமத்தப்பட்ட பந்துவீச்சு மோசடி குற்றச்சாட்டு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், விதிமுறைக்கு மீறி, முழங்கையை அதிகமாக வளைத்துப் பந்துவீசுகிறார் என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான பவுலர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் இவர்.

அவரின் பந்துவீச்சு ஆய்வுசெய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு ஐபிஎல் தொடர் முழுவதும் தடைவிதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இவரின் பந்துவீச்சு வீடியோக்களை ஆய்வுசெய்த நடவடிக்கை குழுவினர், அதில் எந்த முறைகேடும் இல்லை; எல்லாம் சரியாக இருக்கிறது என்று உறுதியானது. இதனையடுத்து, சந்தேகத்திற்கிடமான பவுலர்கள் பட்டியலிலிருந்து சுனில் நரைன் பெயர் நீக்கப்பட்டது.

மேலும், சுனில் நரைன் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுனில் நரைன்.