” பந்தை போடுறியா, இல்ல பவுலரை மாத்தட்டுமா “ – குல்தீப்பை தனது பாணியில் எச்சரித்த தோனி

--

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி மற்றும் குல்தீப் யாதவ்வுக்கு இடையே நடந்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. அதில் பீல்டிங்கில் மாற்றம் செய்யும்படி கூறிய குல்தீபை “ பந்தை போடுறியா இல்லை பவுலரை மாத்தட்டுமா ? என தோனி எச்சரித்தது வைரலாகி வருகிறது.

dhoni

ஆசியக் கோப்பைத் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. இதில், இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டதால், இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து டாஸ் வென்று, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய முகமது சேஷாத் 124 ரன்களும், அவருக்குப் பின் வந்த முகமது நபி 64 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய அம்பதி ராயுடு 57 ரன்களுக்கும், ராகுல் 60 ரன்களுக்கும் வெளியேற, அவர்களை யடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களில் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்ப, நிலைத்து நின்று ஆடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களில் இருந்த போது, நடுவரின் மற்றொரு தவறான முடிவால் எல்பிடபுள்யு ஆனார். இதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இறுதியில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்நிலையில், இந்திய அணி பந்துவீச்சின் போது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப், கேப்டன் தோனி நிறுத்திய பீல்ட் செட்டிங்கை மாற்றும்படி கூறியுள்ளார். அப்போது தோனி பீல்டிங்கை மாற்றமால் மாறாக குல்தீப்பிடம், ” பந்தை போடுறியா இல்ல பவுலர மாத்தவா ? “ என ஒரே வரியில் பதிலளித்து அவரை எச்சரித்தார். இதையடுத்து குல்தீப்பும் மறுப்பு பேசாமல் வாயை மூடிக் கொண்டு, பந்துவீசி சென்றார். தற்போது இவர்கள் பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னரும் மணிஷ் பாண்டேவுடன் பேட்டிங் செய்யும் போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிஷ் பாண்டேவை தோனி, “இங்கே கவனி…அங்கே என்ன பார்த்துக் கொண்டிருகிறாய்? ” என்று கோபமாக கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.