பத்தாயிரம் கோடியை தாண்டி வசூல்.. சாதனையில் இந்திய சினிமா உலகம்..

கலைநயமிக்க மற்றும் தரமான திரைப்படங்களை விட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது வசூலில் வாரிக் குவிக்கும் திரைப்படங்கள்தான்.
பாக்ஸ் ஆபீஸ்.. இந்த இரண்டு வார்த்தைகள் தான், சினிமா உலகின் முக்கியமான தாரக மந்திரம். உயிர் மூச்சு என்றும் சொல்லலாம்.

பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியாவில், திரைப்படங்கள் என்றால் வசூலில் கொடிகட்டிப் பறப்பது இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படங்கள் மட்டுமே..
கதைக்கும் இயல்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படும் மேற்குவங்கம் மற்றும் கேரள திரைப்படங்கள் பொதுவாக பிரமாண்டங்களை விட்டு விலகியே இருக்கும்.

ஆகையால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வியாபார ஆர்வத்துடன் வாங்கப்படுவது இந்தி தெலுங்கு தமிழ் ஆகியவை மட்டுமே. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த மூன்று மொழி திரைப்படங்களுக்கும் சவால் விடும் வகையில், ஹாலிவுட் எனப்படும் ஆங்கில திரைப்படங்கள் அதிக அளவில் வசூலை குவிக்க ஆரம்பித்துள்ளன.
நேரடி ஆங்கிலப் படங்களை ஆங்கிலம் தெரிந்த மேட்டுக்குடிமக்களால் மட்டுமே ரசிக்க முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இதனால் முக்கியமான நகரங்களில் மட்டுமே திரையிடப்படும் ஹாலிவுட் படங்களின் வசூல் என்பது, வியக்கத்தக்க அளவில் இருக்காது.

அமெரிக்காவில் வெளியான திரைப்படங்கள் இந்தியாவில் வெளியாக சில மாதங்கள் பிடிக்கும். 1970களில் பெரிதும் பேசப்பட்ட என்டர் தி டிராகன், எக்ஸார்சிஸ்ட் என பல படங்கள் ஓரிரு வருடம் கழித்தே இந்திய திரையரங்குகளை எட்டிப்பார்த்தன.

ஆனால் நிலைமை இன்று அப்படி கிடையாது. நேரடி ஆங்கிலப் படங்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியாகின்றன. அதைவிட ஆச்சர்யமான விஷயம், அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் தமிழ்நாட்டின் உசிலம்பட்டியில் அதே படம் தமிழில் பேசும் என்பதுதான். அந்த அளவுக்கு தொழில்நுட்பமும், வர்த்தகமும் எங்கோ போய்விட்டன. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஹாலிவுட் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகின்றன.

சென்னையில் ஒரே திரையரங்கு வளாகத்தில் ஹாலிவுட் திரைப்படத்தின் இந்தி, தெலுங்கு தமிழ் டப்பிங் வெர்சன்களை சர்வசாதாரணமாக காணலாம். தங்களது தாய் மொழியில் ஹாலிவுட் திரைப்படங்கள் பேசுவதால் ரசிகர்களும் விழுந்தடித்துக் கொண்டு ரசிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்படும் படங்கள் கோடிகளை வெகு சுலபத்தில் அள்ளிவிடுகின்றன.
இப்படிப்பட்ட சூழலால்தான் இந்தியாவில் திரைத் துறையின் சந்தை விற்பனை 10 ஆயிரம் கோடியை முதன்முறையாக தாண்டி சாதனை படைத்துள்ளது.
மும்பையைச் சார்ந்த ஆர்மேக்ஸ் மீடியாஸ் இந்தியன் பாக்ஸ் ஆபீஸ் என்ற நிறுவனம் தரும் தகவல்களை கொண்டு இனி பார்ப்போம்..
இந்தியா முழுக்க கடந்த 2018-ம் ஆண்டு மொத்த திரைப்படங்களும் வசூலித்த தொகை 9,810 கோடி ரூபாய்.

கடந்த ஆண்டு இது 10,948 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த வசூல் 10 ஆயிரம் கோடி ரூபாயை கடப்பது இதுவே முதல் முறை.
இந்த வசூலில் தனிப்பட்ட ரீதியில் பெருமளவு பலனடைந்தவை ஹாலிவுட் திரைப்படங்கள் தான். நேரடி மற்றும் டப்பிங் படங்கள் என அவற்றின் மொத்த வசூல் 31 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களை காண ரசிகர்கள் மத்தியில் மேலும் மேலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

கடந்தாண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நம்பர் ஒன் வசூல் என்ற பெருமை அவெஞ்சர்ஸ் என்ட் கேம் என்ற படத்திற்கு கிடைத்துள்ளது. நேரடி மற்றும் இந்திய மொழிகளில் டப்பிங் என இந்த படம் வசூலித்த தொகை 433 கோடி ரூபாய்.
இதற்கு அடுத்து தான் இந்திய திரைப்படங்கள் வசூல் பட்டியலிலேயே வருகின்றன. இர்த்திக் ரோஷன் நடித்த வார் என்ற இந்தி திரைப்படம் 357 கோடியை வசூலித்துள்ளது. இந்திய ஆக்ஷன் த்ரில்லரான ஷாகோ திரைப்படம் 349 கோடியும் அடுத்து கபீர்சிங் திரைப்படத்திற்கு 327 கோடியும் கலெக்சன்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வசூல் ஆன மொத்த தொகையில் 44% ஹிந்தி திரைப்படங்கள் வசூலித்தன. கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய். அடுத்து 15 சதவீத வசூலை ஹாலிவுட் திரைப்படங்கள் கண்டுள்ளன.

பிரம்மாண்டமாக எடுக்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மொத்த வசூல் பங்கில் தலா 13%. இரண்டையும் சேர்த்தால் 26%.. ஹிந்தி ஹாலிவுட் தெலுங்கு தமிழ் ஆகிய 4 மொழி திரைப்படங்களை தவிர்த்து மலையாளம் கன்னடம் பெங்காலி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்கள் மொத்த வசூல் 15 சதவீதம்.. அதாவது 1600 கோடி ரூபாய்.

நேரடி ஹிந்தி திரைபடங்களின் வசூலை தென்னிந்தியா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களின் டப்பிங் வெர்சன்கள் பதம்பார்த்து விடுகின்றன என்கிறார் ஆர் மிக்ஸ் மீடியாவின் தலைமை செயல் அலுவலர் அதிகாரியான சைலேஷ் கபூர்.

தமிழில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என பரபரப்பாக பேசப்படும் ரஜினி, விஜய், அஜித் படங்களின் வசூல் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

– ஏழுமலை வெங்கடேசன்