பசு உதைக்கிறது: மாட்டை திருப்பிக்கொடுத்த குத்துச்சண்டை வீராங்கனை

சண்டிகர்,

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதற்காக அரசு பரிசாக தனக்கு அளித்த பசு மாடு பால் தர மறுத்து தங்களை உதைக்கிறது என்று கூறி, அரசிடமே மாட்டை திரும்பி கொடுத்துள்ளனர் சண்டிகரை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகள்.

 

அரியானா மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தேசிய விருது பெற்ற   6 பெண் குத்துச்சண்டை வீரர்களுக்கு அரியானா  அரசு சார்பாக  பரிசு மாடுகள் வழங்கப்பட்டது.

ஆனால் அந்த பசுக்களை தங்களுக்கு பால் தரவில்லை என்றும் தங்களை பின்னங்கால்களால்  உதைக்கிறது அதனால் பசுவை திரும்பி கொடுத்துவிட்டோம் என்று  குத்துச்சண்டை வீராங்கனைகள் கூறி உள்ளனர்.

இதுகுறித்து தங்கம் வென்ற ரோதக் பகுதியை சேர்ந்த  தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ஜோதி குலியா கூறியதாவது,

தான் வெற்றி பெற்றதற்காக அரசு சார்பாக தனக்கு பசு மாடு வழங்கப்பட்டது. அந்த பசுவை தனது தாயார் பராமரித்தார்.  5 நாட்கள் பரிமரித்த நிலையில்,  அது பால் கொடுக்க மறுத்து அவரை 3 முறை காலால் உதைத்துவிட்டது. வேறு யாரையும் பக்கத்தில் நெருங்க விடவில்லை. காலால் உதைக்கிறது.

இதன் காரணமாக தனது தாயார் உடலில் அடிபட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றதாகவும்  இதன் காரணமாக தான் அந்த பசுவை அரசிடம் திருப்பி கொடுத்து விட்டேன் என்று கூறி உள்ளார்.

அரியானாவை சேர்ந்த  மூத்த குத்துச்சண்டை வீராங்கணையான ஜோதி குலியா கவுகாத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல நீத்து, சாக்சி போன்ற குத்துச்சண்டை வீராங்கனைகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட பசு மாட்டை திருப்பி கொடுத்துள்ளார்கள்.