இரண்டு அடி உயரமுள்ள இளைஞருக்கு திருமணம்

முசாஃபர்நகர்

ரண்டடி உயரமே உள்ள அப்துல் கலாம் என்னும் இளைஞருக்கு அவரைப் போலவே உயரம் குறைந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

மனிதர்களில் ஆறடி உயரம் கொண்ட அமிதாப் பச்சனும் உண்டு நான்கடி உயரமே உள்ள குள்ள மணியும் உண்டு. இது மனிதர்களுக்குள் சகஜமாக உள்ள வேறுபாடு. ஆனால் உடல்நலக் குறை காரணமாகவோ அல்லது பாரம்பரியம் காரணமாகவோ அதை விடவும் குறைவான உயரம் கொண்ட மனிதர்களும் உள்ளனர். இத்தகைய மனிதர்கள் ஒரு வகையில் ஊனமுற்றவர்களாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இவர்கள் உயரத்தில் மற்றவர்களைப் போல் இல்லை எனினும் மற்றபடி உடல் மற்றும் மன வளர்ச்சியில் சராசரி மனிதர்களைப் போலவே இருப்பார்கள். ஆனால் இது போல் உயரக் குறைவான ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினம் என்பதே பொதுவான கருத்தாகும். அந்த கருத்து தற்போது மாறி உள்ளது.

முசாஃபர்நகர் அருகே உள்ள நாங்லா கிராமத்தில் வசிக்கும் 24 வயது இளைஞர் அப்துல் கலாம். இவர் சுமார் 2 அடி உயரமே உள்ளவர் ஆவார். இவருடைய உயரம் குறைவாக இருந்தாலும் மற்றபடி 24 வயதுக்குள்ள வளர்ச்சி இவருக்கு இருந்தது. இவருக்கு திருமணம் செய்ய இவர் பெற்றோர்கள் விரும்பினாலும் இவருடைய உயரம் அதற்கு தடையாக இருந்தது.

இந்நிலையில் அப்துல் கலாமின் பெற்றோர் தங்கள் குடும்ப நண்பரான யாசின் என்பவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். யாசினின் விதவை சகோதரி ஜரீஃபா மற்றும் அவர் மகள் தரன்னும் ஆகியோர் யாசினுடன் வசித்து வருகின்றனர். தரன்னும் மிகவும் உயரம் குறைந்தவர் ஆவார். அவரைக் கண்டதும் அப்துல் கலாமின் தாய்க்கு தனது மகனுக்கு இவரை திருமணம் செய்ய ஆசை எழுந்தது.

இதற்கு அனைவரும் ஒப்புக் கொள்ளவே நாங்லா கிராமத்தில் உள்ள தரன்னும் இல்லத்தில் அவருக்கும் அப்துல் கலாமுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் திருமணத்துக்கு வந்து மணமகக்ளை வாழ்த்தி உள்ளனர். தரன்னும் தனது கணவரை விட மூன்று வயது மூத்தவரும் ஒரு அங்குலம் அதிகம் உயரமுள்ளவரும் ஆவார்.

கார்ட்டூன் கேலரி