12. அந்தக் காலத்திலே !

ந்தக் காலத்திலே…பிராமணர்களின் புலம்பல்.

பிரித்தானியர்களின் கீழ் தகுதி அடிப்படையில் அனைத்தும் இருந்தது,  அப்போது நாங்கள் செழித்தோம்.  ஆனால் சுதந்திர இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், திராவிட இயக்க வளர்ச்சியின் பின்னர், தகுதி எனும் மதிப்பீடே மறக்கப்பட்டு, சாதியின் பெயரால் என்றாகி, எல்லாமே குட்டிச்சுவராகிவிட்டது, என்று அவர்கள் சொல்லிச் சொல்லி மருகாத நாளே கிடையாது.

நீங்கள் எப்படி கல்வியில் சிறக்க முடிந்தது? உங்களிடம் தனியாக அதற்கென ஜீன்கள் இருக்கின்ற னவா என்ன? மற்ற சமூகத்தினர் எவருக்குமே படிப்பு வாசனை வந்துவிடக்கூடாது என்பதில் நீங்கள் மிகக் கவனமாக இருந்ததுண்டா, இல்லையா?

தொடக்கத்திலிருந்தே இந்திய சமூகத்தில் சாதி/வர்ண பாகுபாடுகள் மிகுந்திருந்தன. கற்கவென ஒரு வர்ணம், வணிகத்திற்கென்று ஒன்று, இப்படி. பிரிட்டிஷார் ஆட்சியிலேயே தங்கள் சொந்த பந்தங்களை கேந்திரமான இடங்களில் நிறுத்திவைத்து செங்கோலோச்சியவர்கள் அவர்கள். நவீன யுகத்திலேயே அப்படி என்றால்,  ”பிராமணோத்தமா,”என அரசனே அடிபணிந்த காலத்தில், எப்படியெல்லாம் அவர்கள் வாழ்ந்திருப்பார்கள் எனக் கணிப்பது கடினமில்லையே.

கி.பி.100-250 சங்க காலம் என கூறப்படுகிறது. சாதிப் பாகுபாடு அதிகம் இல்லாத கட்டம் அது.  ஆனாலும் அந்தணர்கள் என்று ஒரு பிரிவினர் வாழ்ந்திருக்கின்றனர்,

பரிபாடலில் பல இடங்களில் அந்தணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. “நாவல் அந்தணர் அருமறைப்பொருள்” என திருமால் குறிக்கப்படுகிறார்(பரிபாடல்.1).

அந்தணர் பயிற்றும் அருமறையின் ஒரு வரியை அப்படியே எடுத்தாளுகிறது பரிபாடல். ~வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும்  தாதையும் நீ என மொழியுமால்; அந்தணர் அருமறை” (பரிபாடல் 3) என்ற பாடலடியின் வழியாகத்  தாமரைப்பூவில் பிறந்த பிரம்மனும் அவனின் தந்தையும் ஆகிய திருமால் நீயே என்று வேதநெறி சொல்வதாக பரிபாடல் குறிப்பிடுகின்றது. இவ்வகையில் மறைகள் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன, என்கிறார் பழனியப்பன் எனும் பேராசிரியர்.

அந்தணர் என்ற ஒரு வகுப்பு இருக்குமாயின் அவர்களுக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டி ருக்கத்தானே வேண்டும்? ஆம் அவர்களுக்கென்று தனி குடியிருப்புக்கள் இருந்திருக்கின்றன.

தொல்காப்பியம் இன்னமும் பிந்தையது. அதில் வடமொழித் தாக்கமும் உண்டு.

(இது குறித்து கடும் விவாதமுள்ளது. நான் நிபுணனில்லை. பல தமிழுணர்வாளர்கள் கி.மு என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் வையாபுரிப்பிள்ளை போன்றோர் பிற்கால ஆக்கமே என்கின்றனர்.)

அத் தொல்காப்பியத்தில் வருணங்கள்/சாதிகள் பற்றிய குறிப்பும் உண்டு.  மரபியலில் அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற வர்ண/சாதி அடுக்கை விவரிக்கிறது.   அதாவது கி.மு சகாப்த இறுதி அல்லது கிபி சகாப்த துவக்கத்தில் ஆக்கப்பட்ட தொல்காப்பியத்தின்படியும் பிராமணர்கள் மிக உயர்ந்த நிலையிலிருந்திருக்கின்றனர். இதெல்லாம் இடைச் செருகல் என வாதிடுவது வேறு.

மாபெரும் தமிழ்மன்னன் ராசராசன் பிரம்மதேயங்களை உருவாக்குகிறான். ஏவலாட்களைத் தவிர பிராமண ரல்லாதோர் எவரும் அங்கு வசிக்கமுடியாதென்கிறான். அந்நிலங்களுக்கு கிஸ்தியும் கிடையாது.

இந்திய துணைக் கண்டம் முழுதுமே தானமாக பிராமணர்களுக்கு நிலங்கள் அளிக்கப்பட்டு வந்தி ருக்கின்றன. எந்த அரசனின் தானமாயிருந்தாலும் சரி, பின் வருவோர் அதனை பறித்துவிடக் கூடாது என்பதே பொது நியதியாக இருந்து வந்திருக்கிறது, அது குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் இப்படித்தான் மிராசுகளாகின்றனர்.

நாயக்க மன்னர்கள் காலத்தில் கிராமக் கர்ணமும் அவர்கள்தான், பிராந்திய தளவாய்களும் அவர்களே. வட இந்தியாவிலும் படைத் தளபதிகளாக பிராமணர்கள் இருந்திருக்கின்றனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவத்தில் வங்காளம் மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில் பிராமணர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். 1857 புரட்சிக்கு வித்திட்ட மங்கல் பாண்டேயும் ஒரு பிராமணர்தான்.  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கி களில் பயன்படுத்தவென வழங்கப்பட்ட தோட்டாக்களின் உறைகள்  மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது

அவ்வுறைகளைக் கடித்துத்தான் தோட்டாக்களை வெளியே எடுக்கவேண்டும். அவ்வாறு கடிக்கும்போது எங்கள் சாதி ஆச்சாரம் குலைகிறது என்று பிராமண படை வீரர்களே முதலில் கலகக்குரலெழுப்புகின்றனர்.

பின்னர் இந்தியர்களை அரசு இயந்திரத்தில் இணைத்துகொள்வதென்ற கொள்கையின் விளைவாய் மிக அதிக பலன் பெற்று வந்ததும் பிராமணர்கள்தான்.

தரம்பால் போன்றோர் பிராமணரல்லாதோருக்கும் கல்வியில் நிறைய வாய்ப்புக்கள் இருந்தன என்கின்றனர். காலனீய ஆட்சியின்போது மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் பிற சமூக ஆசிரியர்களும், மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்ததை உறுதி செய்கின்றன என வாதிடுகின்ற னர் அவர்கள்.

ஆனால் அத்தகைய ஆய்வுகள் முழுமையானதல்ல என்ற விமர்சனங்கள் உண்டு. எப்படியும் யதார்த்தம், கடந்த பகுதியில் நாம் சந்தித்த சென்னை ராஜதானி தலைமைச் செயலர் அலெக்சாண்டர் கார்ட்யூ சொன்னதுதான் – ”எத்தனை தேர்வுகள் வைத்தாலும் பிராமணர்களே வெற்றி பெறுவர். அந்த அளவு அவர்களுக்கு கற்கும் வாய்ப்பிருக்கிறது, சூழலிருக்கிறது பாரம்பரியம் இருக்கிறது.” பிராமணர்களே சமூகத்தின் அச்சாணியாய் விளங்கினர். அவர்கள் மற்றவர்களை இயன்றவரை தள்ளிவைக்கவும் முயன்றனர்.

இப்பின்னணியில் அரசியலிலும் அவர்கள் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கத்தானே செய்யும்? 1884ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை மஹாஜன சபை காங்கிரசின் முன்னோடி அமைப்பாக கருதப்படுகிறது. அது பிராமணர்களால் துவக்கப்பட்டதே.

பின்னர் முதல் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட ஆறு பிரதிநிதிகளில் ஐவர் பிராமணர்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு சென்னை ராஜதானியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் 14 பேர் பிராமணர்கள்தான்.

அதிகாரப் பகிர்வு எனச் சொல்லி உள்ளாட்சி அமைப்புக்களில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டபோது பெரும்பாலான பதவிகளைப் பெற்றதும் அவர்களே.

சென்னை மாநாகராட்சி பிராமண உறுப்பினர்கள்தான் டி எம் நாயரை மாநில கௌன்சில் தேர்தல்களில் தோற்கடித்து, தங்களுக்கும், பின் வரும் சந்ததியினருக்கும், ஆழமாகக் குழி தோண்டிக்கொண்டனர்.

பிராமணரல்லாதார் அறிக்கை, பின்னர் நீதிக் கட்சி என பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு முயற்சிகள். எனினும், ஒட்டுமொத்தமாக ஆதிக்கத்தைத் தகர்த்தது பெரியார் ஈ வே ராதான். (தொடரும்)