தொடர்-12: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

12 பௌத்தம் – பிராமணர்களுக்கெதிரான கலகக் குரல்

பிராமணர்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் எதிரி பெரியார். அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியது 1925ல். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரேயே பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கங்கள் தோன்றிவிட்டன.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த கௌதமபுத்தரில் தொடங்குகிறது இந்தப் போராட்டம் எனலாம். அவர் என்னவோ துன்பங்களிலிருந்து விடுதலை பெற சரியான வழி எது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் தனது வாழ்க்கையினைக் கழித்தார், அந்த அளவில் அவரது தேடுதல்க ளில் அரசியல் இல்லை, சமூகப் பார்வை இல்லை எனலாம். துன்பத்திலிருந்து விடுபட்டு வீடு பேறை அடைய அட்ட சீல வாழ்முறையை சொன்னவர் அவர்.

இல்லற வாழ்க்கையை விட்டொழித்தல், சினத்தை அகற்றல், ஒருவருக்கும் தீமை செய்யாமை, பொய் கூறாமை,   பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும், நன்னெறி தவறாமல் இருத்தல்,  தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல், இப்படிச் செல்லும் அவர் பட்டியல் அனைத்து சாதிகளுக்கும் அப்பாற்பட்டதாக அமைந்தது. இறைவனை அடைய இடைத் தரகர்கள் தேவையில்லை என்பதுதான் அவரது செய்தி.

அதுவே வேதகால பிராமணர்களுக்குப் பெரும் அடி. வேள்விகள் செய், எங்களுக்கு தானம் கொடு, இம்மையிலும் மறுமையிலும் உனக்கு நல்வாழ்வு உறுதி என்று அரசர்களை நம்ப வைத்தவர் களல்லவா அவர்கள்.  அந்த வேள்விகள் செய்யும் முறை அவர்களுக்கு மட்டும்தானே தெரியும். ஆக ஒட்டுமொத்த சமூகத்தின் மூடநம்பிக்கைகள் மறையோதியவர்களின் மூலதனமானது, அவர்கள் செழிக்கமுடிந்தது.

ஒன்றை மட்டும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர்களை ஏதோ பிரம்மாண்ட வில்லன்களாக நான் சித்தரிக்க முயலவில்லை. மனித நாகரிக வளர்ச்சியில் ஒரு கட்டம் அத்தகைய சிந்தனைகள், வாழ்முறை. வேள்வி செய்துதான் முக்தி அடையமுடியும் என்று சமூகம் நினைத்திருக்கலாம், அதன் வழியே அந்தணர்கள் பயன்பெற்றனர் என்பது வேறு. அதே நேரம் அவர்களும் அப்படியே நம்பியிருக்கலாமல்லவா?

சம்புகன் தவம் செய்கிறான், நாடு சீரழியும், அவன் சிரசைக் கொய்துவிடு என்று சொன்னபோது அது நிச்சயம் வில்லத்தனமே. கர்ணன் பிராமணனாக நடித்து விற்பயிற்சியைக் கற்க வேண்டி யிருந்ததும் அந்த ரகமே. அந்தக் கால நம்பிக்கைகளின் வெவ்வேறு பரிமாணங்கள் அவை.

ஆனால் தெய்வ நம்பிக்கையோ அல்லது சடங்குகள் செய்தால்தான் அருளென்ற கருத்தாக்கமோ வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கவேண்டியதில்லை. அப்படி அப்போது நினைத்தார்கள், அந்தணர்களுக்கு அது வசதியாகப் போயிற்று.

அதெல்லாம் ஒருபுறமிருக்க, அந்தணர்கள் ஆட்சிக்கு வழிசெய்த அந்த நம்பிக்கைகளுக்கு புத்தரின் போதனைகள் உலைவைக்க முயன்றன என்பதைத்தான் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

முக்தி எவருக்கும் உண்டு அட்ட சீலப்படி நடந்தால் என்பதோடு நிற்கவில்லை பௌத்தம். தங்கள் மதத்தில் எவர் வேண்டுமானாலும் இணையலாம் என்று சொல்லப்பட்டதால் சனாதன இந்து மதத்தில் புறக்கணிக்கப்பட்ட பலரும் பௌத்தத்தைத் தழுவத் தொடங்கினர். முதற்கட்டத்தில் பிராமணரல்லாத மேல் சாதியினரைத்தான் சங்கங்கள் ஊக்குவித்தன என்றாலும் நாளடைவில் அனைத்து சாதிகளையும் வரவேற்கத்தொடங்கின என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நகர்ப்புற நாகரிகம் வளர்ந்தும், பொருளீட்டும் தங்களை அந்தணர்கள் இழிவாகப் பார்க்கிறார்களே என நொந்த வைசியர் சமூகம் அதிக அளவில் பௌத்தத்தைத் தழுவினர். அதே போல் ராஜகுருக்களின் அட்டகாசத்தை சகித்துக்கொள்ளமுடியாத ஷத்திரிய அரசர்களும்.

கணிகையர் நன்கொடைகளைக்கூட பௌத்த மடாலயங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதாவது சனாதன சமூகம் நிராகரித்த அல்லது இழிவாகக் கருதிய பல பிரிவினருக்கு பௌத்தத்தால் புதிய அந்தஸ்து கிடைத்தது.

திராவிட இயக்கத்தால் விழிப்படைந்த பெரும்பான்மை பிராமணரல்லாதார் மூன்று, நான்கு தசாப்தங்களிலேயே பிராமண ஆதிக்கத்தை தகர்த்துவிடமுடிந்தது. ஆனால் பௌத்தம் ஏன் அதனை சாதிக்கமுடியவில்லை?

கல்வியறிவு என்பது மிகச் சிறிய பிரிவினருக்கே என்றிருந்த கட்டத்தில் ஆழமான தத்துவார்த்த விவாதங்களை எழுத்து வடிவில் பரந்து பட்ட மக்களிடம் கொண்டு செல்வதென்பது இயலாத செயல். பேசிப் பேசித்தான், செவி வழியாகத்தான் புதிய சிந்தனைகளைப் பரப்பமுடியும்.

புத்தர்  பிராமணர்களின் மொழியாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைத் தவிர்த்து அவர் பிறந்து வளர்ந்த மகத நாட்டு மக்களின் அன்றாட பேச்சு மொழியான மகதி பிராக்ருதத்தில் சொற்பொழி வாற்றி வந்தார் என்று கருதப்படுகிறது. அது ஒரு பிரச்சார தந்திரம் மட்டுமல்ல, தான் மேல்சாதி யினர் மொழிக்கு எதிரானவர் எனும் மறைமுகப் பிரகடனம்கூட.

போக்குவரத்து வசதிகளெல்லாம் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் அதிக இடங்களுக்கு அவர் சென்று பிரச்சாரம் செய்திருக்கமுடியாது. அப்படியும் பௌத்தம் பரவியது ஒரு வகையில் பிராமண ஆதிக்கத்திற்கெதிரான புரட்சி எனலாம்.

மௌரியர்கள் தொடங்கி குஷானர்கள் வழியாக குப்தப் பேரரசுவரை அரசு ஆதரவும் அதற்குக் கிடைக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல செல்வாக்கு குறையத்தொடங்குகிறது. நிதிப் பற்றாக்குறையால்   பௌத்த சங்கங்களை, பிக்குகளை, பிக்குணிகளை பராமரிப்பதில் சிக்கல்கள்.

நில உடைமை அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டதும் இந்தியாவில் பௌத்தம் தேய்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார் டி டி கோசாம்பி. அதுவரை விவசாயிகள் கட்டும் கிஸ்தியினை அரண்மனை அலுவலர்கள் நேரடியாக வந்து வசூலித்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் ஆங்காங்கே பெரு விவசாயிகள் குறுநில மன்னர்கள் போலாகி, கிஸ்தி வசூல் அவர்கள் பொறுப்பு என்றானது. இந்தப் பின்னணியில்தான் புதிய புதிய பகுதிகள் விவசாயத்திற்குட்படுத்தப்பட்டன.

காடுகளை அழித்து கழனியாக்கி விவசாயத்தைப் பெருக்கிய அந்தக் கட்டத்தில் அத்தகைய பணிகளுக்கென ஏராளமான ஆட்கள் தேவைப்பட் டார்கள். வெற்றி கொள்ளப்பட்ட காடு வாழ் பழங்குடியினரே விவசாய விஸ்தரிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டனர். அவர்களை சூத்திரர்களாக்கி சமூக நீரோட்டத்தின் ஓரத்தில் அமர்த்த வேதங்கள் கூறும் வர்ண அமைப்பு உதவியது. இந்த மாபெரும் பணியில் பிராமணர்கள் மிக ஆர்வத்துடன் களமிறங்கினர்.

பிறப்பின் அடிப்படையிலேயே சமூக அந்தஸ்து, எல்லாம் அந்த பகவான் அருளியது, ஒழுங்காக இருந்தாயேயானால் அடுத்த பிறவியில் ஓர் அடுக்கு முன்னே செல்லமுடியும் என்பது பிராமண வேதங்களின் செய்தி.

எனவேயே அனைவரும் சமம் என்ற பௌத்தத்தை நிராகரித்து, தங்கள் திட்டங்களுக்கு ஒத்துழைத்த பிராமணர்களின் புரவலர்களானார்கள் பெரு விவசாயிகள்.

ஜைனமும் வேதியர்களின் பங்கை நிராகரித்தது. ஆனால் பல்வேறு காரணங்களினால் பௌத்தம் அளவுக்குக்கூட அதனால் தாக்கமெதனையும் ஏற்படுத்தமுடியவில்லை. (தொடரும்)

ஆக முதல் புரட்சி இப்படி நசித்தது.

(தொடரும்)

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Brahmins face social justice? T.N.Gopalan Series-12, Buddhism - rioting against the Brahmins, தொடர்-12: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
-=-