7. எங்கே பிராமணன்?     – த.நா.கோபாலன்

திமுகவின் அசுர வளர்ச்சியாலும், அரசியலதிகாரத்தை இழந்துவிட்டதாலும் முற்றிலும் மனமுடைந்து போயி ருந்த பிராமணர்களுக்கு அருமருந்தாக அமைந்தவர் சோ.

ஆட்சியாளர்களின் தவறுகளை, ஊழல்களை, அத்து மீறல்களை அம்பலப்படுத்தியது, கருணாநிதியின் அராஜகத்தை எதிர்கொண்டது, வீரமணி போன்றோரின் போலித்தனங்களை தோலுரித்துக் காட்டியது, இதனை யெல்லாம் துணிச்சலாக தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் செய்தது மற்ற பிராமணர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

தன் பங்கிற்கு அவரும் பிராமணர்களின் நம்பிக்கைகளை, அவர்களின் வாழ்முறையினை நியாயப்படுத்தும் வகை யில் எழுதி வந்தார்.

தொண்ணூறுகளில் தனது துக்ளக் ஏட்டில் எங்கே பிராமணன் என்ற நாவலை  தொடராக எழுதினார். உண்மையான பிராமணன் யார் என்று அந் நாவலின் நாயகன் தேடுகிறான். இறுதியில் வேத நியமங்களை முழுமையாக அனுசரிக்கும் பிராமணர் எவருமே இல்லை என்ற முடிவுக்கு வருகிறான்.

ஆனாலும் அந் நாவல் பிராமணர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. பின்னர் புத்தக மாக வெளியிடப் பட்டு இதுவரை 15 பதிப்புக்களைக் கண்டிருக்கிறதென்றால் சோவின் வெற்றியை நாம் அனுமானித்துக்கொள்ளலாம்.

துக்ளக்கிற்கு பிராமண வாசகர்கள் அதிகம், சனாதன நடுத்தரக் குடும்பங்களில் அனைத்திலுமே அப்போது காணப்பட்ட இதழ். பலர் தொடரைக் கத்தரித்து பைண்ட் செய்து மீண்டும் மீண்டும் படிப்பதும் உண்டு.

அத் தொடர் எவரும் பிராமணனாய் பிறப்பதில்லை, சாதி என்பதே பிறப்பால் வருவதில்லை, மாதவம் செய்தே பிராமண நிலையினை அடையமுடியும், வேறு சாதிகளில் பிறப்போரும் பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இதிகாச சான்றுகள் உள்ளன என்றெல்லாம் வாதிடும். சாதிப்பாகுபாடு பார்ப்பதே பிராமணர்களுக்கு இழுக்கு எனவும் கூறும்.

இவ்வாறு பிராமணீயத்தின் அடிப்படையினை அசைப்பதுபோலத் தோன்றும் ஒரு தொடரை பிராமணர்கள் ஏன் கொண்டாடவேண்டும்? அவர்கள் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்ட னர்.

இலட்சிய பிராமணன் இல்லாது இருக்கலாம், ஆனாலும் அடிப்படை கோட்பாடுகள், மந்திரங்கள், வாழ்நெறி அனைத்தும் போற்றுதலுக்குரியவை என்று சோ கூறும்போது புளகாங்கிதம் இயல்பு தானே. நம்முடைய ஆச்சார அனுஷ்டானங்களில் தவறில்லை, நாம் முறையாக, உண்மையான பிராமணனாக நடந்துகொள்ளவேண்டும் என்றுதானே சோ சொல்கிறார் என்று பெருமிதத்துட னேயே தொடரை அணுகியது சமூகம்.

மேலும் அவர்களுக்கு ஆறுதலான பல செய்தி களும் அதில் உண்டு. More sinned against than sinning – ஒருவர் இழைத்த பாவத்தை விடவும் அதிகமாகத்தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று ஷேக்ஸ்பிய ரின் கிங் லியர் நாடகத்தில் ஒரு வசனம் வரும். பல்வேறு சமூகங்கள் இப்படித்தான் தங்களை சமாதானப்படுத்திக்கொள்கின்றன.

பிராமணர்கள் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும், யாசிக்காவிடினும் வயல் வரப்புக்க ளில் கடை வீதிகளில் இறைந்து கிடக்கும் தானியங்களை பொறுக்கி எடுத்துச் சென்று அதனை சமைத்து உண்ணவேண்டும் என்பதுதான்  நியமம் என்கிறார் சோ.

என் நெருங்கிய உறவினர் ஒருவர் பாகவதத்தில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாகச் சொல்லி சொல்லி மாய்ந்து போவார். நாமெல்லாம் இழி பிறவிகள் போலும், நாமெப்படி உயர்சாதியாவோம் என்பார்.

ஆனால் அந்த உறவினரோ அல்லது சோவோ யதார்த்தத்தில் பல நூற்றாண்டுகளாக உஞ்சவிருத்தி செய்தா பிராமணர்கள் பிழைத்துவந்தனர் என்ற கேள்வியை எழுப்புவதில்லை. பிரம்மதேயங்களாக, வரி கட்ட அவசியமில்லாத நிலங்களையல்லவா அவர்கள் அரசர்களிடமிருந்து பரிசாகப் பெற்றனர்?

பிரம்மதேய நிலங்களைப் பற்றிய ஆய்வுகள் பல. தமிழ் மரபு விக்கியில் டாக்டர் பத்மாவதி பட்டியலிட்டுச் சொல்கிறார்: பிரம்மதேயம் — என்பதில் பிரம்ம/பிரம –என்பது பிராமணர்களையும், தாயம் என்பது உரிமையையும் குறிக்கிறது. பிராமணர்களுக்கு உரிமையுடைய நிலம் அல்லது ஊர் பிரமதாயம் ஆயிற்று. பெரும்பாலும் பிரம்மதேய ஊர்கள், ஏற்கெனவே அமைந்திருக்கும் நீர்நில வளமிக்க ஆற்றுப் படுகைகளில் உள்ள ஊர் அல்லது அதற்கு நிகரான நீர் ஆதாரமுள்ள ஊரை ஒட்டியே அமைந்திருந்தன.

பிரம்மதாயமாக நிலக்கொடை அளிக்கும் வழக்கம் வட இந்தியாவில் மெளரிய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது. கோசல நாட்டு மன்னர்களும், மகத நாட்டு மன்னர்களும் அந்தணர்களுக்கு கிராமங்களை பிரமதாயமாக அளித்திருந்த செய்திகளைப் பழைய பாலி நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் தமிழகத்திலும் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்கப் பட்டிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு நம்மை பிச்சை எடுத்தல்லவா பிழைக்கச் சொன்னார்கள் என்ற புலம்பலில் சோவும் சேர்ந்துகொண்டார்.

பூணூல் போடுவதிலிருந்து திருமணம் வரை அனைத்துவித மந்திரங்களின் சாராம்சத்தைச் சொல்லி ஆஹா எப்படியெல்லாம் நம் முன்னோர்கள் சிந்தித்திருக்கின்றனர் என புளகாங்கிதம் அடையவும் நாவல் உதவும். மந்திரங்களின் பொருளை உணர்ந்து சொன்னாலும் சரி, அரைகுறையாய்ச் சொன்னாலும் சரி, சொல்லவேண்டும், சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்கிறார் சோ.

சரி மந்திரங்களைச் சொல்வதால் எத்தகைய பயன்கள் என்பதை உறுதியாகச் சொல்லவியலுமா என்றால், கேட்காதே, பெரியவர்கள் சொன்னதை மட்டும் செய் என்கிறார்.

அது மட்டுமல்ல புராணக் கதைகளை அபத்தம் என நினைக்கவேண்டாம். நம் பகுத்தறிவிற்கு எட்டாததால் குப்பை என அலட்சியப்படுத்தக்கூடாது. அந்தக் காலத்தில் கூறப்பட்டவை இன்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன என்ற பரிவார வாதங்களையும் வலியுறுத்துகிறது நாவல்.

பிச்சை எடுத்து அல்லது வயல் வரப்பு தானியங்களைப் பொறுக்கி வந்து வாழ்க்கை நடத்துவதே பிராமணர்களுக்கு அழகு என்றாலும் கூட, இன்றைய கால கட்டத்தில் அவ்வாறு வாழ்வது இயலாதுதான், இயன்றவரை தன்னளவில் நேர்மையாக இருந்தால் சரி எனும் ரீதியில் தப்பும் வழியினையும் சோ கொடுத்துவிடுகிறார்.

இவையெல்லாம் அவர் தன் மூளையைக் கசக்கி உருவாக்கிய சூத்திரங்களன்று. பிராமண சமூகத்தினர் மத்தியில் பொதுவாக நிலவும் கருத்துக்களை ஒன்று திரட்டித்தான் அவர் நாவலாக்கி யிருக்கிறார்.  எனவே பிராமணர்களுக்கு அத் தொடர் மிகவும் பிடித்துப்போயிற்று. அவர் சொன்னதை மீண்டும் மீண்டும் தங்கள் வட்டாரங்களில் பேசி தங்களுக்குத் தாங்களே உறுதிப்படுத்திக்கொண்டனர்.

(தொடரும்…)