9. பிராமணராய்ப் பிறக்க மாதவம் செய்யவேண்டுமா? – த.நா.கோபாலன்

ஓர் இடைச் செருகல்

மிழகத்தில் பிராமணர்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருப்பது உண்மையே, அவர்கள் ஆதங்கங் களைப் புரிந்துகொள்ளமுடியும், ஆனால் வரலாறு என்ற ஒன்று இருக்கிறதே எனக் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

தொடர்ந்து சில நிகழ்வுகளை நினைவுகூறுவதுதான் என் திட்டம். ஆனால் சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி அடுத்த பிறவியில் நான் பிராமணனாகப் பிறந்து சாஸ்தா ஆலய மேல்ஷாந்தியாகவேண்டும் எனச் சொல்ல ஒரே பரபரப்பு.

பிராமணராய்ப் பிறப்பதே மாபாவமா என சிலர் கேட்டுக்கொண்டிருக்கையில், அப்படிப் பிறக்காமல் போய்விட்டேனே என வருந்துகிறார் ஒரு பிரமுகர்.  அவர் பாரதீய ஜனதா கட்சிக்காரர். மாநிலங்களவை உறுப்பினரும்கூட.

பிறப்பால் நாயர் வகுப்பைச் சார்ந்தவர். கேரள மாநில பிராமணர்கள் சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசும்போதுதான் முப்புரி நூல் அணிந்தவர்கள் கடவுளுக்கு சமானம் என்றும், அடுத்த பிறவியின் பிராமணனாய்ப் பிறந்து சபரிமலை கோயில் தலைமை அர்ச்சகராகவேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும், வயதுவந்த அனைவர்க்கும் வாக்குரிமை, பிறப்பின் காரணமாய் எவரும் எவரையும் ஒடுக்கமுடியாது, அனைவரும் சமமே என நமது அரசியல் சட்டம் சொன்னாலும் கூட, முற்போக்கு மாநிலமான கேரளாவிலேயே, ஒரு பிரபல நடிகர் பிராமணராய்ப் பிறப்பது ஒரு வரம் என நினைக்கிறார். அது குறித்து தமிழக பிராமணர்கள் பெருமைப்படலாம்தானே!

அது போக, மறு பிறவி என்ற ஒன்றிருந்தாலும், நமது சாத்திரங்கள், நம்பிக்கைகள் படி, சுரேஷ் கோபி அவ்வாறு பிராமணராகப் பிறப்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல!

மகாபாரதப் போரில் பீஷ்மர் மரணப் படுக்கையில் இருக்கும்போது, யுதிஷ்டிரர் அவரிடம் பல கேள்விகள் கேட்பார்.

ஷத்திரியன், வைசியன் அல்லது சூத்திரன் பிராமணனாக முடியுமா? முடியுமெனில் அது நற்செயல்கள் மூலமாகவா, வேதங்களைக் கற்றா, தவமிருந்தா, என்றும் கேட்கிறார் அப்போது.

பீஷ்மரோ அப்படி சாதி/வர்ணம் மாற வாய்ப்பே இல்லை என உறுதியாகச் சொல்லுவார். பிராமணனாய்ப் பிறப்பதுதான் மானுடத்தின் அதி உச்ச நிலை எனும் அவர், ஒரு கதையையும் கூடவே சொல்லுவார்.

வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை தத்தெடுத்து பூணூல் உட்பட அனைத்து சடங்குகளை யும் செய்து, வேதங்களைக் கற்றுக் கொடுத்து வளர்ப்பார் ஒரு பிராமணர்.

அவ்வாறு பிராமணனாகவே வளர்க்கப்பட்ட மாதங்கன், கழுதை பூட்டிய தேரில் சவாரி செய்யும் போது சரியாக ஓடவில்லை என அக்கழுதையைப் போட்டு அடித்து துவைத்துவிடுவான்.

அதற்கு ஆறுதல் சொல்லும் அக்கழுதையின் தாய், ” …உன்னை அடித்தவன் பிராமணனல்ல…ஒரு சண்டாளன்…அவர்களெல்லாம் அப்படித்தான் இருப்பார்கள்…பொறுத்துக்கொள்,” என்று சொல்லும்.

அதிர்ச்சியடைந்த மாதங்கன்,  “ஐயகோ, இது என்ன கொடுமை…நான் பிராமணனல்லவா…உனக்கெப்படித் தெரியும் என் பிறப்பு பற்றியெல்லாம்,” எனக் கேட்க, தாய்க்கழுதை, ”நீ பிராமணத் தாய்க்குத் தான் பிறந்தாய்…அவள் நாவிதன் ஒருவனிடம் தன்னைப் பறிகொடுக்க, அப்போது பிறந்தவன் நீ. எனவே நீ சண்டாளன்,” என்று பதிலளிக்கும்.

மனமுடைந்துபோகும் மாதங்கன் கடும் தவங்கள் மேற்கொள்வான்.  அப்போது அவன் முன் தோன்றும் இந்திரன், “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்…எதுகேட்டாலும் தருகிறேன்,” என்று சொல்ல, “நான் பிராமணனாகவேண்டும், வேறு எதுவும் வேண்டாம்,” என மாதங்கன் பதிலளிக்க, இந்திரன் கடும் கோபத்துடன், “அட முட்டாளே உன்னையே நீ அழித்துக்கொண்டிருக்கிறாய். ஒருக்காலத்திலும் அது நடக்கப்போவதில்லை. பல்வேறு உயிரிகள் மீண்டும் மீண்டும் பிறந்து, நீண்ட காலத்திற்குப் பிறகே மனிதர்களாவார்கள்.

முதலில் சண்டாளனாக ஓராயிரம் ஆண்டுகள், அப்புறம் சூத்திரனாக மேலும் ஓராயிரம், அங்கிருந்து வைஸ்யனாக 30,000 ஆண்டுகள், ஷத்திரியனாக, மேலும் 60 மடங்கு, 30,000 x 60 x 60, அதே அளவு காலம் சென்ற பிறகு சாதியிழந்த பிராமணனாகலாம்…அப்புறம்  200 மடங்குக் காலம் ஆயுதமேந்தும் பிராமணனாக,  அதன் பிறகு மேலும் 300 மடங்குக் காலம் கழிந்த பிறகு, (அப்பாடா, இப்போது மூச்சுவிடலாம்!) காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் தூய பிராமணனாகலாம்… இடையில் ஏகப்பட்ட சிக்கல்கள் எழலாம், ஏதேனும் தவறு செய்துவிட்டால், கடும் முயற்சிகளுக்குப் பிறகு பெற்ற சாதி அந்தஸ்தையும் இழக்கலாம்…இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமே இல்லை…நீ சண்டாளன்…அத்தோடு நிறுத்திக்கொள்…” என்பான்.

அதன்படி ஒரு நாயர் ஒருவர் வேதமறிந்த பிராமணனாக எத்தனை கோடி ஆண்டுகள் ஆகும் என்பதைக் கணக்கிட்டுக்குங்க சுரேஷ் கோபி, என்று ஒருவர் முகநூலில் செமத்தியாகக் கலாய்த்திருக்கிறார். கணக்கு அத்துடன் முடியவில்லை.

நமது புராணங்கள் படி, பிரம்மனின் ஒரு நாள் 4.32 பில்லியன் ஆண்டுகள் நமக்கு. அடுத்த நாள் அவன் உறங்கப் போய்விடுவான், அப்போது பிரளயம் பெரு வெள்ளம், மறு நாள் எழுந்திருக்கும்போது ஆன்மாக்கள் விடுதலை பெறுகின்றன. புண்ணியம் செய்தவர்கள் வர்ண அடுக்கில் ஒரு படி மேலே செல்ல லாம், இப்படியே தொடரும் நம் பயணம். இடைப்பட்ட காலத்தில் தவறேதும் செய்ய வில்லையானால், 37 ட்ரில்லியன் பிறப்புக்களுக்குப் பிறகு சுரேஷ் கோபி பிராமணராகி சாஸ்தா கோயில் தலைமை அர்ச்சகராகலாம்!!!

(மில்லியன் பத்து லட்சம், ஆயிரம் மில்லியன் ஒரு பில்லியன், ஆயிரம் பில்லியன் ஒரு  ட்ரில்லியன் (ஒன்றுக்குப் பிறகு 12 பூஜ்யங்கள் – ஒரு தகவலுக்காக)

இன்னுமொரு சிக்கல் சூரியனின் வாழ்நாளே பத்து பில்லியன் ஆண்டுகள்தான். அதில் ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆதலினாலே சுரேஷ் பிராமணராவதற்கு முன் சூரியனின் ஆயுள் முடிந்து உலகம் இருண்டே விடும். அப்புறம் பிரளயம் என்ன, பிறப்பென்ன, பிராமணனென்ன என நகைக்கிறார் அவர்.

(தொடரும்)