பிரபல பிராண்ட் உப்புகளில் பிளாஸ்டிக் துகள்கள் : அதிர்ச்சி தகவல்
மும்பை
மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் பிரபல நிறுவனம் விற்கும் உப்புகளில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததை கண்டறிந்துள்ளது.
பூமி கடுமையாக மாசு படிந்து வருவது தெரிந்ததே. இந்த மாசடைவது நிலப்பரப்பில் மட்டுமின்றி நீர் நிலைகளிலும் கடலிலும் கூட அதிகரித்து வருகிறது. அந்த தாக்கம் கடலில் இருந்து கிடைக்கும் உப்பிலும் இருக்கலாம் என கூறப்பட்டது. அதை ஒட்டி சந்தையில் விற்கப்படும் பிரபல உப்புக்களை மும்பை ஐஐடி சோதனை செய்தது.
அந்த சோதனையின் முடிவு குறித்து ஐஐடி பேராசிரியர் ஸ்ரீவத்சவா, “வீட்டு உபயோகத்துக்கான உப்பு தயாரிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய உப்புக்களுக்கு சர்வ தேச அளவில் கிராக்கி உள்ளது. பொதுவாக இந்தியாவில் கடலில் இருந்து உப்பு எடுக்கப்படுகிறது.
அந்தக் கடலில் உள்ள மாசுக்கள் உப்பிலும் கலந்துள்ளது. இந்த உப்புக்களை ஆராய்ந்த்தில் பல நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உப்புக்களில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் துண்டுகள் சிறு இழைகளில் இருந்து சுமார் 5 மீமீ சுற்றளவுள்ள பெரிய துகள்கள் வரை உள்ளன.
பொதுவாக பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யப்படாமல் நீர் நிலைகளில் கலக்கப் படுகின்றன. அவ்வாறு கலக்கப்படும் பிளாஸ்டிக் கடலினால் அரிக்கப்படும் போது அழிக்கப்படுவதில்லை. மாறாக சிறு சிறு துகள்களாகி அவை உப்பு எடுக்கும் போது உப்புடன் கலந்து காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்குகளை வடிகட்டுவது மூலம் சுமார் 85% க்கு மேல் நீக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.