கோவை:

முருகானந்தம் கண்டுபிடித்த நாப்கின் தயாரிப்பு இயந்திரங்களை, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிராவோ வாங்கியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக மலிவு விலை நாப்கின்களைத் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார்.

ஆனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகே முருகானந்தத்துக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. இயந்திரத்தைக் கண்டுபிடித்ததுடன் நிற்காமல், நாப்கின்களைத் தயாரிக்கும் பணிகளில் பெண்களையே நேரடியாக ஈடுபடுத்தினார் முருகானந்தம்.

இதையடுத்து, தமிழக அரசின் பாடப்புத்தகம் முதல் ஆஸ்கர் விருது வரை முருகானந்தத்தின் முயற்சிக்கான அங்கீகாரமாக கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான பிராவோ, முருகானந்தத்தை கோவை வந்து சந்தித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து, முருகானந்தத்தைத் தேடி எதற்காக பிராவோ கோவை வந்தார் என்று விசாரித்தோம்.

பிராவோவின் சொந்த நாடான டிரினிடாட் டொபாகோவில், பள்ளிக் குழந்தைகள் பலரும் மாதவிடாய்ப் பிரச்னையால், பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர்.

கிராமப்புற பெண்களுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பிராவோ நீண்ட நாள்களாகவே முயற்சி செய்துவருகிறார்.

இந்நிலையில், முருகானந்தம் குறித்து கேள்விப்பட்ட பிராவோ, அவரை சந்திப்பதற்காக கோவைக்கே வந்துவிட்டார்.

முருகானந்தத்தை சந்தித்து, இயந்திரம் குறித்துப் பேசிவிட்டுச் சென்றுள்ளார் பிராவோ. விரைவில், முருகானந்தம் தயாரித்த இயந்திரங்கள், பிராவோ மூலம் டிரினிடாட் டொபாகோவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்தியாவைப் போலவே, அங்கும் கிராமப்புறப் பெண்களை வைத்தே நாப்கின்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தச் சந்திப்புக்கு முன்பு வரை, முருகானந்தத்துக்கு பிராவோ யார் என்றே தெரியாதாம். அவருக்குத் தெரிந்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தானாம்.

உலகம் முழுவதும் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைக்கு, தமிழகத்தில் இருந்து தீர்வு கிடைத்திருப்பது பெருமைக்குரியதே.