தீவிர போராட்டம் காரணமாக டீசல் விலையை குறைத்தது பிரேசில்

பிரசில்லா:

பிரசிலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு எரிபொருள் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று 600 சாலைகளும் முடங்கின. காஸ் நிலையங்களிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டது. 2016ம் ஆண்டில் அரசியல் கொள்கை முடிவு மூலம் எரிபொருள் விலையை அரசின் பெட்ரோபிரேஸ் நிறுவனமே நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்தன் காரணமாக டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அடுத்த 5 மாதத்தில் பிரேசில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் லாரி டிரைவர்களின் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிரசேலில் 60 சதவீத பொருட்கள் லாரிகள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த ஜனவரியில் டீசலின் சராசரி விலை 3.6 ரியலாக இருந்தது. வேலை நிறுத்தத்திற்கு முன்பு இது 3.6 ரியலாக அதிகரித்தது. கடந்த 26ம் தேதி 3.8 ரியல் என்ற புதிய உச்சத்தை டீசல் விலை அடைந்ததால் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. பிரேசில் ஜி20 குழுமத்தின் அங்கமாகும். லாரிகள் ஸ்டிரைக் காரணமாக முதல் 5 நாட்களில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருளாதாரம் பாதித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் டீசல் விலையை குறைக்க அதிபர் மைக்கேல் டேமர் முன் வந்தார். ஒரு லிட்டர் டீசல் விலையில் 0.46 ரியலை குறைத்து அறிவித்தார். இது 60 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு பாதித்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்தார். இதையடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.