அமேசான் காடழிப்பு சர்ச்சை – பதவிநீக்கம் செய்யப்பட்ட வானியல் ஆய்வுநிலைய இயக்குநர்

ரியோடிஜெனிரா: அமேசான் காடழிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் பட விபரங்கள் தொடர்பான சர்ச்சையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அந்நாட்டின் தேசிய வானியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரிகார்டோ கால்வயோ.

“இந்த விபரங்கள் அனைத்தும் பொய் என்றும், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதால், நாட்டின் நற்பெயருக்கு களங்கும் ஏற்படும் வகையில் பொய்யான விபரங்களை வெளியிடுவதாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று கூறியுள்ளார் பிரேசில் நாட்டின் வலதுசாரி அதிபர் ஜேர் போல்ஸோனாரோ.

ஆனால், அதிபரின் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளார் ரிகார்டோ. அந்நாட்டு வானியல் ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் வெளியிட்ட அமேசான் காடுகள் குறித்த படங்களில், அங்கே காடழிப்பு நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியது. இந்த அதிகரிப்புக்கு புதிய வலதுசாரி அதிபருடைய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“உண்மையை வெளியிட்டதற்கான ஒரு பழிவாங்கல் நடவடிக்கையே இந்தப் பதவி நீக்கம் என்று குற்றசம் சாட்டியுள்ளார் பிரேசில் கிரீன்பீஸ் நிர்வாகி மார்சியோ ஆஸ்ட்ரினி.