பிரெட், பன், பீட்சா, பாவ் பாஜியில் நச்சுப்பொருள்…! : அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு

 

லைநகர் டில்லியில் விற்கப்படும்,  ‘பிரெட்’ வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, வெளியான தகவலை அடுத்து, விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது.

டில்லியில் பரவலாக விற்பனையாகும், பிரபலமான 38 வகை பிராண்டுகளில்  32ல் , பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய ஆபத்தான  வேதிப் பொருட்கள் கலந்துள்ளதாக, சி.எஸ்.இ., எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய  ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

Burger

சி.எஸ்.இ., துணை பொது இயக்குனர் சந்திரபூஷண் இது குறித்து பேசுகையில், “பிரெட் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களில் ஒன்று, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘2பி கார்சினோஜென்’ வகையைச் சார்ந்தது.  மற்றொரு வேதிப்பொருள், தைராய்டு பிரச்னைகளை ஏற்படுத்தும். இவை, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருளாகும். ஆனால் இது இந்தியாவில்  தடை விதிக்கப்படவில்லை.

டில்லியில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு சாதாரணமாக பரவலாக  பிரபல பிராண்டுகளின் பிரெட், பன், பீட்சா மற்றும் பாவ் பாஜி போன்றவற்றின், 38 வகைகள், சி.எஸ்.இ., ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.  இவற்றில், 84 சதவீத உணவுப் பொருட்களில் பொட்டாசியம் புரோமேட் அல்லது பொட்டாசியம் அயோடேட் கலந்திருப்பது தெரிய வந்தது.
வேறு சில ஆய்வகத்தில் நடந்த சோதனைகளிலும் இதே போன்ற முடிவு தான் கிடைத்தது.

பிறகு, சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் விஞ்ஞானிகளுடன் இதுகுறித்து பேசினோம்”  என்று அவர் கூறினார்.

ஆய்வுக்கு உட்பட்ட பிரெட் போன்ற பொருட்களில்10 லட்சம் துணுக்குகளில், 1.15 முதல் 22.54 துணுக்கு என்றளவில் பொட்டாசியம் புரோமேட் அல்லது பொட்டாசியம் அயோடேட் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

வெள்ளை பிரெட், பாவ், பன், பீட்சா போன்றவற்றின், 24 மாதிரிகளில், 19ல், நச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருள் கலந்துள்ளது. பர்கர் வகை உணவில், நான்கில் மூன்றில், வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்ரக பிராண்டாக விற்பனையாகும் வெள்ளை பிரெட், பன் போன்றவற்றில், அதிகளவிலான பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் கலக்கப்பட்டு இருக்கிறது.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

“பிரெட் மாவை மிருதுவாக்க, பொட்டாசியம்அயோடேட் மற்றும் புரோமேட் பயன்படுத்தப்படுவதை, இந்திய உணவு தரக்கட்டுப்பாடு ஆணையம் அனுமதிக்கக் கூடாது. இதற்கான விதிமுறைகளை, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தரக்குழு, திருத்தம் செய்ய வேண்டும். நச்சுத் தன்மையுள்ள வேதிப் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்தலாம். அதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும். வேதிப்பொருள் கலந்தஉணவு வகைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எந்று பிரட் பொருட்களை ஆய்வு செய்த  சி.எஸ்.இ. நிறுவனம்த தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர்  ஜே.பி.நட்டா, இது குறித்து கூறுகையில், “பிரட் பொருட்களில் வேதிப்பொருள் கலந்திருப்பதாக கூறப்படுவது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறேன். பொதுமக்கள் இந்த விஷயத்தில் பயப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.