புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உண்ணக்கூடிய ரொட்டி, பஞ்சாப் வயலிலிருந்துதான் வருகிறது என்று அவரிடம் சொல்லுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மாநில விவசாயிகள், டெல்லி – ஹரியானா மாநில எல்லையில், லட்சக்கணக்கில் திரண்டு, மாபெரும் எழுச்சிமிகு மற்றும் வீரம் செரிந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிராக்டர்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் என்று வாகனங்களும் ஆயிரக்கணக்கில் அங்கே நின்றுகொண்டுள்ளன.

டெல்லி புராரியிலுள்ள சான்ட் நிரன்கரி மைதானத்தில், அவர்கள் போராடுவதற்காக மத்திய அரசு இடம் வழங்கினாலும், அங்கே வந்தால் தங்கள் போராட்டத்தின் வீரியம் குறைந்துவிடும் என்பதால், டெல்லிக்குள் செல்ல மறுத்து, எல்லையிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

அவர்களுக்கு, மாதக்கணக்கில் தேவையான உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு, முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு சமைக்கப்படுகின்றன.

பல வயதான விவசாயிகள், கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவார்களோ என்று அச்சம் தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களோ, “நாங்கள் கொரோனாவைப் பற்றி கவலைப்படவில்லை. எங்கள் விவசாயம் மற்றும் அதை நம்பியுள்ள எங்களது குடும்பம் மற்றும் தலைமுறையின் எதிர்காலம் குறித்தே கவலைப்படுகிறோம்.

கூட்டமாக சேர்ந்தால், கொரோனா வைரஸ் தொற்றிவிடும் என்று கூறும் அரசு, எதற்காக இந்த இக்கட்டான நேரத்தில், அந்த அபாயமான மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும்” என்று எதிர்கேள்வி கேட்கின்றனர்.

டெல்லியின் சான்ட் நிரன்கரி  மைதானத்தில், மத்திய அரசின் சார்பில் போராட்டத்திற்கான ஏற்பாடுகள்(தற்காலிக கழிவறைகள் அமைத்தல்) செய்யப்பட்டாலும், அங்கே, இதுவரை சில நூறு விவசாயிகளே சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி – ஹரியானா எல்லையில், தீர்க்கமாகப் போராடிவரும் விவசாயிகள், “பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறுங்கள். அவர் உண்ணும் ரொட்டி, எங்கள் வயலிலிருந்துதான் விளைவிக்கப்படுகிறது” என்று.

உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த அழைப்பையும், விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ள நிலையில், நிலைமை உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. இப்போராட்டத்தில், தற்போது மாணவர்களும் சேர்ந்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசால், இப்போராட்டத்தை, அவ்வளவு எளிதில் வன்முறையின் மூலம் ஒடுக்கிவிட முடியாது என்றும் கூறப்படுகிறது.

நிலைமை இந்தளவிற்கு தீவிரமாக இருப்பதால்தான், மோடி அரசில் அங்கம் வகித்த அகாலிதளம் கட்சி, கூட்டணியிலிருந்தே முன்னதாகவே விலகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.