கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு! பதற்றம்

--


தஞ்சை:

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே  வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணை வெளி யானதை தொடர்ந்து கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணை வெளியேறி நிலத்தில் உறிஞ்சப்படுவது காரணமாக, விவசாய நிலங்கள் பாழாகி போவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும் கூறி, பொதுமக்கள் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற கோரி போராடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மக்கள் போராட்டத்தை ஒடுக்க, ஓஎன்ஜிசிக்க ஆதரவாக போலீசார் தடியடி நடத்தினர்.  இதில் பலருக்கு மண்டை உடைந்தது.

மேலும் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை ஜாமீனில் வரமுடியாத வழக்குகளின் கீழ் போலீஸ் கைது செய்தது. இவர்களை விடுதலை செய்யக் கோரி கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கதிராமங்கலம் பெரியகடைத்தெருவில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக  அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.