அகமதாபாத்,

குஜராத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், குஜராத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி  நீர்வழி விமானம் மூலம் கோவிலுக்கு பயணம் மேற்கொணடார்.

மக்களிடம் இழந்த செல்வாக்க மீட்கவே, மரபை மீறி ஒன்றை எஞ்சின் உள்ள  நீர்வழி விமானத்தில் பிரதர் மோடி பயணம் மேற்கொண்டதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

குஜராத்தின் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று பிற்பகலுடன் முடிவடைகிறது. அதையடுத்து அங்கு பாஜ மற்றும் காங்கிரஸ் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பேரணிக்கு அகமதாபாத்தில் பேரணிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி நீர் வழியாக தனது பயணத்தை மேற்கொண்டார்.

இதையடுத்து, குஜராத்தில் உள்ள  சபர்மதி ஆற்றில்,  நீர்வழி விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி பயணம்  செய்தார். இதற்காக இன்று காலை சபர்மதி ஆறு பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, நீர் வழி விமானம் மூலம் சபர்மதி ஆற்றிலிருந்து தாரோய் அணைக்கு சென்றடைந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த குஜராத் முதல்வர விஜய் ரூபானி, ‘மோடி கடல் விமானம் மூலம் அம்பாஜி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் சபர்மதிக்கு வந்தடைவார்’ என கூறினார்.

இந்நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் முதல் நீர்வழி விமானம் இது என்றும்,  அதுபோல முதன்முதலாக இயக்கப்பட்ட  கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி மற்றும் முதல் பிரதமர்  என்ற பெருமையையும்  மோடி பெற்றதாக பாஜவினரும், பாஜ ஆதரவு செய்தி நிறுவனங்களும் செய்திகள் வெளியிட்டு மோடியை பிரபலப்படுத்தி வருகின்றன.

குஜராத்தில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி உள்ள நிலையில், ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றி விடுமோ என்ற பயத்திலும், தனது 22 ஆண்டுகால பாஜ ஆட்சியை இழந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவும், மக்களிடையே தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே   இதுபோன்ற பயணங்களை மரபை மீறி மேற்கொள்வதாகவும், சாமி தரிசனம்  செய்ய பயணம் மேற்கொள்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தியாவில் இசட்பிளஸ் பாதுகாப்பு உள்ள ஒரு பிரதமர் இதுபோன்ற ஒன்றை என்ஜின் உடைய விமானத்தில் பயணம் செய்ய தடை  மற்றும்  வெளிநாட்டு பைலட் உடன் பாது காப்பின்றி பயணம் செய்யவும் தடை உள்ள நிலையில், பிரதமர் மோடி இந்த நீர் வழி விமானத்தில் பயணம் செய்திருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, காங்கிரசாருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு என்று தரம் தாழ்ந்து விமர்சித்த பிரதமர் மோடி, தற்போது இதுபோன்று மரபை மீறி பயணம் செய்து பொது ம்க்களிடையே இழந்த தனது மதிப்பை மீட்க முயற்சித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நீர் வழி விமான பயணம் ஏற்கனவே கேரளாவின் கொச்சியில் நடைபெற்றுள்ள நிலையில், பாஜகவினரும், அவரது ஆதரவு மீடியாக்களும், முதன்முதலாக மோடி பயணம் செய்வதுபோல ஒரு மாயை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.