சென்னை,

மிழகத்தில் நடப்பு ஆண்டில் 4  அரசு மருத்துவமனைகளில் குழந்தை பராமரிப்பு மையம் தொடங்கப்படும் என்றும்,  சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்பட 5 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்படும் என்று  தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை எழும்பூர் அரசினர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவின் செயல்பாட்டினை ஆய்வு செய்த அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது,  மரணத்திலிருந்த காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் அடங்கிய பெட்டகம், அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு நினைவு பரிசு மற்றும் சிறப்பாக பணிபுரிந்து வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கேடயமும் வழங்கி கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது,

தமிழகத்தில் வருடத்திற்கு 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இவற்றில் 99 சதவீத பிரசவங்கள் மருத்துவ மனைகளில் நடக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் என்.ஐ.சி.யு- மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதி தற்போது ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 3,696.70 கோடி செலவில் 39.57 லட்சம் கர்ப்பிணி பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி நிறுவப்பட்டது. இதுவரையில் 21,642 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

352 பஸ் நிலையங்கள் மற்றும் முனையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்காக பாதுகாப்பான தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரசவத்தின்போது கர்ப்பிணித் தாய்மார்களின் மனநிலையை மேம்படுத்தும் பொருட்டு, பிரசவ அறையில் பிரசவிக்கும் தாய்மார்களுடன் ஒரு உறவினர் உடனிருத்தல் திட்டம் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவ நிகழ்வை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கி உள்ளது.

மேலும் நடப்பு ஆண்டில் பத்மநாபபுரம், பட்டுக்கோட்டை, பெரிய குளம், திருமங்கலம் ஆகிய அரசு மருத்துவமனையில் இளம் சிசு பராமரிப்பு மையங்கள் ரூ. 2 கோடியே 40 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

வேலூர், திருநெல்வேலி, ஸ்டான்லி மருத்துவமனை, நாமக்கல், காஞ்சீபுரம் மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் 5 தாய்ப்பால் வங்கிகள் ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.