பசுப் பாதுகாவலர்கள் நடத்தும் கும்பல் கொலையை நிறுத்த அமைச்சரின் அபார தீர்வு

டில்லி

செயற்கை கருத்தரிப்பு ஊசி மூலம் பசுக்களை மட்டும் உருவாக்கி வளர்த்தால் கும்பல் கொலைகள் நின்று போகும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது அறிவியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகக் காளை மாடுகளின் விந்தணுக்களில் பாலின பாகுபாடு செய்யப்பட்டு பெண் கரு மட்டுமே உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.   இந்த முறை ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் சோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.  இவ்வாறு செயற்கை கருத்தரிப்பு ஊசி மூலம் பசுங்கன்றுகளை உருவாக்கும் நாடளாவிய திட்டத்தை வரும் 11 ஆம் தேதி அறு பிரதமர் மோடி துவங்க உள்ளார்.   இந்த திட்டம் தொடர்ந்து 6 மாதம் நடைபெற உள்ளது.

இந்த திட்டம் குறித்து விலங்குகள் நலத்துறை அதிகாரி ஒருவர், “செயற்கை கருத்தரிப்பு ஊசியினால் பால் வளம் அதிகரிக்கும்.  அது மட்டுமின்றி இவ்வாறு உருவாகும்  பசுக்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  அதே வேளையில் இம்முறையில் பெண் கன்றுகளை ஈனுவது 90% மட்டுமே சாத்தியமாகும்.

அதே வேளையில் கருத்தரிப்பு ஊசிக்கு ரூ. 20 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.   பாலின பாகுபாடு செய்யப்பட்ட விந்தணுக்கள் உள்ள செயற்கை கருத்தரிப்பு ஊசியின் விலை ரூ.500 முதல் ரூ.600 வரை இருக்கும்.  இதற்கான தொகையை அரசு மானியமாக வழங்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முறை குறித்து விலங்குகள் நலத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்,  “பாலியல் பாகுபாடு செய்யப்பட்ட விந்தணுக்கள் மூலம் காளை மாடுகளையும் உருவாக்க முடியும்.  அவ்வாறு உருவாக்கப்படும் காளை மாடுகள் நல்ல பலம் பொருந்தியதாகவும் நீண்ட நாட்கள் தங்கள் உழைப்பை அளிக்கக் கூடியவையாகவும் இருக்கும்.

எனவே பசுவோ காளையோ எந்த ஒரு கால்நடையும் இனி ஆதரவின்றி விடப்பட மாட்டாது.  இதனால் பசு வதை மட்டுமின்றி கும்பல் கொலையும் முழுவதுமாக நின்று விடும்.  இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஆதரவற்று விடப்படும் கால்நடைகள் குறித்த விவகாரம் தீர்த்து வைக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கும்பல் கொலை குறித்த கருத்து சமூக வலைத் தள  ஊடகங்களில் நகைச்சுவையைக் கிளப்பி உள்ளது.