லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்: நீதிபதிகள் ஆவேசம்

மதுரை:

ஞ்ச லாவண்யங்களை ஒழிக்க லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக  கருத்துக்கள் தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மின் வாரிய உதவி பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக மதுரை கிளை நீதிமன்றத்தில் பழனி பாரதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  ,” தான், 30.12.2018-ல் நடந்த 325 மின் வாரிய உதவி பொறியாளர்களுக்கான தேர்வில் தேர்வெழுதியதாக கூறியுள்ளார். அப்போது, எழுத்துத்தேர்வுக்கு முன்பு கேள்வித்தாள் வெளியானது எனவும் இது தொடர்பான விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பது தற்போது வரை தெரிய வில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 1575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் இதனால் உதவி பொறியாளர் நியமன நடைமுறைக்கும், நியமன உத்தரவு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் இதற்காக நடந்த எழுத்துத்தேர்வை ரத்து செய்து, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,. மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம்பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது என கடுமையாக சாடிய நீதிபதிகள்,  லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும்,  இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சப் பழக்கம் ஒழியும், லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும் என கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Bribe buyers ,