லஞ்சம் தர மறுப்பு: குழந்தை பெற்ற பெண்மீது ஆசிட் வீசிய கொடூர நர்ஸ்!

விஜயவாடா,

ரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும், பிரசவம் பார்த்த நர்ஸ்களுக்கு லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரமுற்ற நர்ஸ் ஒருவர், அந்த குழந்தை பெற்ற பெண்மீது, இரக்கமில்லாமல் கொடூர மனதுடன் ஆசிட்டை  வீசியுள்ளார்.

இது மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்சம் தர மறுத்த பிஞ்சு குழந்தையின் தாய் மீது இரக்கமில்லாமல் ஆசிட் வீசிய நர்ஸ் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று பிரசவ வலியுடன் விஜயவாடா அடுத்த கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய கிரிஜாபிரியா அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு பிரசவத்தின்போது  அழகான ஆண் குழந்தையை பிறந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த 2 செவிலியர்கள், தங்களுக்கு ஆளுக்கு 200 ரூபாய் கொடு என்று அந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், கிரிஜாபிரியாவோ  தன்னிடம் தற்போது, ரூ.100 மட்டுமே உள்ளதாகவும் அதை பெற்றுக்கொள்ளும் படி கூறியுள்ளார்.

இதை ஏற்காத நர்ஸ் செரிபா ஆத்திரமடைந்து,  கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்து பிரியா மீது ஊற்றியுள்ளார். இதன் காரணமாக அலறித்துடித்தார் பிரியா. ஆசிட் பாதிப்பினால் பிரியாவின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நர்ஸ்கள் இருவரும் அங்கிருந்து நழுவி விட்டனர்.

நர்சின் இந்த கொடுமையான செயல்குறித்து, பிரியாவின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும்  பொதுமக்கள், மருத்துவமனை சுகாதார அலுவலரை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆசிட் வீசிய நர்ஸ்மீது நடவடிக்கை எடுப்பதாக  மருத்துவமனை சுகாதார அலுவலர் ராமா ராவ் கூறி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து, ஆசிட் வீசிய நர்ஸ்மீது விஜயவாடா போலீசாரும்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.