டில்லி,

ந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாம் பகுதியில் எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில்,  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மோடி சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே எல்லை பதற்றம் முடிவுக்கு வருமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த  அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம்.

அப்போது, உலகளாவிய பிரச்சினைகள்,  பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் கோவா மாநிலத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.

இந்நிலையில்,  இந்த ஆண்டுக்கான 9வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெற உள்ளது. அந்நாட்டின் சீயமன் நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சீன அரசு செய்து வருகிறது.

இந்த மாநாட்டில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் சீனா செல்வார் என்று  கூறப்படுகிறது.

கடந்த மாதம் மோடி ஹம்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டில் பேசுகையில், ‘‘சீன அதிபர் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் முன்னேற்றமும் ஒற்றுமையும் மேலும் வலுப்படும்’’ என்று புகழாரம் சூட்டி இருந்தார்.

அது போல பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை சீன அதிபர் பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியா, பூடான், சீனா எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் சீனாவும், சீன ராணுவம் வெளியேற வேண்டும் என்று இந்தியாவும் தொடர்ந்து கூறி வரும் வேளையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள மோடி சீனா செல்வது எல்லை பதற்றத்தை தடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை 25ந்தேதி  சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் லி கெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.