அ.தி.மு.க. எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகள் காதலனுடன் மாயம்

.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயமாகி இருப்பது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).    இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர்.

ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா

ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி.

வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா திருமணம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்தது.

திருமணத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வதாக இருந்தனர்.

 

திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில்  திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக  நடந்தது.

 

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணமகள் சந்தியா சத்தியமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி வீட்டிலிருந்து சென்றார்.
ஆனால்  அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை.  அக்காவீட்டில் விசாரித்தால் அங்கும் வரவில்லை என்பது தெரியவந்தது. உறவினர் மற்றும் சந்தியாவின் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து  சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரில் எனது மகள் அவளது அக்கா வீட்டுக்கு போய்வருவதாக கூறி கொண்டு சென்றவள் எங்கு சென்றாள் என்று தெரியவில்லை. அவளை கண்டு பிடித்து தாருங்கள் என்று  குறிப்பிட்டுள்ளார்.

மாயமான மணமகள் சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவருடன்தான் சந்தியா சென்றிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை தெரிவித்துள்ளார். தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.