முரார்படி, உத்தரப்பிரதேசம்.

ணமகன் மணமேடையில் குட்கா மெல்லுவதைக் கண்ட மணமகள் அவரை மணமுடிக்க மாட்டேன் எனச் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார்.

வட இந்தியாவில் இளைஞர்களிடையே குட்கா மெல்லும் பழக்கம் அதிகமாக காணப் படுகிறது.  அதே நேரத்தில் அங்குள்ள பெண்களில் பலருக்கு அந்த வாசனையே பிடிப்பதில்லை என்பதே உண்மை.

அதைபோல் ஒரு பெண்தான் உத்திர பிரதேசம், முரார்படியை சேர்ந்த தேவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).  இவருடைய பெற்றோர்கள் விருப்பப்படி இவருக்கு பக்கத்து கிராமத்திலுள்ள ஒரு இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.  திருமண நாளும் வந்தது.  மேடையில் மணச்சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தன.

மணமேடையில் குட்கா வாசம் அடிப்பதை உணர்ந்து, மெல்ல தலை நிமிர்ந்த தேவி குட்கா மெல்லுவது மணமகனே என்பதை அறிந்ததும்  அதிர்ச்சி அடந்தார்.  அவரைப் பொறுத்தவரை குட்கா பழக்கமே தவறு,  அப்படியிருக்க மணமேடையிலும் குட்கா மெல்லும் மணமகனா என கொதிப்படைந்தார். தன் கையைப் பிடித்துக் கொண்டிருந்த மணமகனின் கையை உதறிவிட்டு திரைப்படங்களில் வருவதைப் போல நிறுத்துங்க கல்யாணத்தை எனக் கூவினார்.

வந்திருந்த விருந்தினர்களுக்கு ஒரே அதிர்ச்சி,  காரணம் கேட்டதற்கு, மணமகன் குட்கா பழக்கத்துக்கு அடிமையானதால் தனக்கு மணமுடிக்க விருப்பமில்லை என்பதை கண்டிப்புடன் கூறிவிட்டார் மணமகள்.   பெற்றோருடன் திருமண வீட்டை விட்டு வெளியேறினார்.

மணமகன் வீட்டார் போலீசில் புகார் செய்து நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.

போலீஸ் விசாரித்து வருகிறது.