சென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில்,  நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற  புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை தயாரித்து வழங்கி வருகிறது. இதற்கு  பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சசி 2வது ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஏதும் படிக்காமல்,  தேர்வு இல்லாமல் தேர்ச்சி அறிவிக்கப்படுவது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் கல்வி அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள நிலையில், ஏதும் படிக்காமலேயே தேர்ச்சி  பெற்றதாக அறிவிக்கப்படுவது, மாணாக்கர்களின் எதிர்காலத்தை பாழடித்து விடும் என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற  புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது.  இந்த புத்தகத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள். இதை  ஆசிரியர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தே மாணாக்கர்கள் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்வி தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் பாடப் புத்தகங்கள் தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனித்து பயிலுமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதன்மூம் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ மாணவிகள் அடுத்த உயர்வகுப்பிற்கு செல்ல தேவையான அறிவுத்திறனை பெறுவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால், பல அரசு பள்ளிகளில் இந்த புத்தகத்தை வாங்கும் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து வருகின்றனர். மாணாக்கர்களுக்கு பள்ளியில் நேரடியாக பாடம் நடத்தினாலே சரியாக புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். அப்படி இருக்கும்போது, மேலும் புத்தகங்களை வழங்குவது ஏன்? இதனால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.