வடகிழக்கு மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்: மேகாலயா முதல்வர்

மேகாலயா: மத்திய அரசின் குடிமக்கள் மசோதா தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது என்றும், எனவே அம்மக்களின் மனதில் நம்பிக்கையை கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார் மேகாலயா மாநில முதல்வர் கோன்ராட் சங்மா.

வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் நான்காவது கான்கிளேவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொண்டார். அப்போது பேசிய மேகாலயா முதல்வர் கோன்ராட் சங்மா, “குடிமக்கள் மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களுடனான கலந்துரையாடலை மத்திய அரசு தவிர்க்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

“குடிமக்கள் திருத்த மசோதாவிற்கு பிறகு என்ன நடக்கும்? வங்கதேசத்திலிருந்து மக்கள் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டிருப்பார்களா? அதற்கு ஏதேனும் தேதி வரையறை உள்ளதா அல்லது தொடர்ச்சியான ஊடுருவலா? வடகிழக்கில் வாழும் எங்களுக்கு இத்தகைய அச்சங்கள் உள்ளன” என்றார் மேகாலயா முதல்வர்.

எனவே, இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அனவைரையும் அழைத்து மத்திய அரசு பேச வேண்டுமென்றும், இதுதொடர்பான ஒருமித்த கருத்தை எட்ட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.