ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்? என்ன சொல்கிறார் நிதி ஆயோக் துணைத்தலைவர்

டில்லி:

நாடு முழுவதும்  பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், அதை ஜிஎஸ்டிக்கும் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவைகளை  வ ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது நடைமுறைச் சாத்தியமற்றது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மட்டும் இன்றும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராமல் தவிர்க்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் வரி வருவாய் காரணமாக, இதை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், தற்போதையை விற்பனை விலையை குறைந்த பட்சம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 வரை குறைய வாய்ப்புள்ளது. மாநில அரசுகளின் வரி காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே, பெட்ரோல் டீசல் விலையையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் டி ல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதித்து வருவதாக கூறினார். மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான அதிக அளவிலான வரி விதிப்பதால்தான் அதை ஜிஎஸ்டிக்கும் கொண்டு வர முடியவில்லை என்றும், . ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரம்பு 28 சதவீதமாக உள்ள நிலையில், அத்துடன்  மத்திய – மாநில அரசுகளின் வரிகளைச் சேர்த்தால் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர எந்தவொரு மாநிலமும் விரும்பவில்லை என்றும்,  அதை மீறி பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால்  பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க எத்தனை மாநிலங்கள் முன்வரும் என்பதைக் கூற முடியாது என்பதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல, அது நடைமுறைக்கு சாத்தியமாகாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.