பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் கணிசமான பகுதி மழையால் ரத்தானது, இந்திய அணிக்கு சாதகமா? என்ற வகையில் அலசப்படுகிறது.

இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால், இந்த டெஸ்ட் போட்டியில், குறைந்தபட்சம் ‘டிரா’ செய்து, தொடரை சமன் செய்வதே இந்திய அணிக்கு பெரிய விஷயம் என்ற நிலை உள்ளது.

ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் குவித்த நிலையில், இன்று தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி, 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில், இன்றைய ஆட்டம் தொடர்ந்திருந்து, இந்திய அணி குறைந்த ரன்களுக்கே மேலும் சில விக்கெட்டுகளை இழந்திருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகியிருக்கும்.

எனவே, இன்றைய ஆட்டம் ரத்தானதன் மூலமாக, இந்திய அணிக்கு சற்று சாதகம் ஏற்பட்டுள்ளது.

நாளை ஆட்டத்தில், சற்று நிலைத்து நின்று, மூன்றாவது செஷன் வரை இந்திய அணி ஆடினால், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் போதிய அவகாசம் இருக்காது. இதன்மூலம், இந்திய அணி போட்டியை ‘டிரா’ செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.