லண்டன்: சமீபத்தில் மரணமடைந்த இங்கிலாந்தின் இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப்பின் உடலை, முழு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசு கட்டடங்களில் உள்ள பிரிட்டன் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் இடம் மற்றும் தேதி இன்னும் சரியாக அறிவிக்கப்படாத நிலையில், 40 நிமிடங்களுக்கு, நிமிடத்துக்கு ஒரு ரவுண்ட் துப்பாக்கிச்சூடு என்கிற கணக்கில் 40 முறை துப்பாக்கிகள் விண்ணை நோக்கி சுடப்பட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் கால்பந்து அமைப்பு இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செய்ய உள்ளது. பிபிசி உள்ளிட்ட பல முன்னணி பிரிட்டன் ஊடகங்கள் அவரது இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப உள்ளன. பிரபல பிரிட்டன் செய்தி இதழான ‘தி சன்’ தனது தலையங்கத்தில் ‘உங்களுடன் சேர்ந்து நாங்களும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்’ என்று ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றன.

டெய்லி மெயில் உள்ளிட்ட பல பத்திரிகைகள் இளவரசர் பிலிப் குறித்தும், அவரது சாதனைகள் குறித்தும் விரிவான கட்டுரைகள் எழுதத் துவங்கி விட்டன. பொது இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளவரசர் பிலிப்புக்கு மலர்வளையம் மற்றும் மலர்கொத்து வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வின்சர் கேசில் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் சேப்பல் பகுதியில் இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.