பல்வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை – பிரிட்டன் முயற்சி!

லண்டன்: சுமார் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளை கண்டறியக்கூடிய ஒரு சோதனை ரத்தப் பரிசோதனையை, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையகம் மேற்கொள்ளவுள்ளது.

புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதற்காக, இந்தவகையில் நடத்தப்படும் முதல் ரத்தப் பரிசோதனை இதுவே என்று கூறப்படுகிறது. இதன்மூலம், அடுத்தாண்டு சுமார் 165000 நோயாளிகளுக்கு இது மேற்கொள்ளப்படும்.

இந்தப் பரிசோதனை, அமெரிக்க நிறுவனமான கிரெய்ல் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இது எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பத்தாண்டிற்குள் இது பரவலாக கிடைக்கச் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தில், டிஎன்ஏ -க்களை வெளியிடும் புற்றுக் கட்டிகளைக் கண்காணிப்பதன் மூலம் இந்தப் பரிசோதனை பயனாற்றுகிறது – அதாவது, ஒரு நோயாளி நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் முன்னதாக.