பிரிட்டன் : இஸ்கான் இயக்கத்தினர் கொரோனாவால் கடும் பாதிப்பு

ண்டன்

பிரிட்டனில் உள்ள இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிர் இழந்துள்ளனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸால் பிரிட்டன் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.  இந்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியது கண்டறியப்பட்ட போதும் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இளவரசர் சார்லஸ், சுகாதார அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணம் அடைந்துள்ளனர்.  அரசி எலிசபெத் கொரோனா அச்சம் காரணமாக இருப்பிடத்தை மாற்றியதாகவும் செய்திகள் வந்தன.

ஹரே கிருஷ்ணா இயக்கம் என அழைக்கப்படும் இஸ்கான் இயக்கம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.  பல வெளிநாட்டினர் இந்த இயக்கத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.   உலகின் மிகப் பெரிய நகரங்களின் இந்த இயக்கத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.  பல இந்து சமய மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இஸ்கான் இயக்கத்தினரால் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் பிரிட்டனில் உள்ள இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த 1000 பேர் கலந்து கொண்ட ஒரு துக்க நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடந்தது.   அப்போது இங்கு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.   அந்த சமயத்தில் அரசு தரப்பில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்காததால் கொரோனா தொற்று குறித்த புரிதல் இல்லாமல் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த இயக்கத்தை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் மார்ச் 12 ஆம் தேதி நடந்த நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.  இதில் ராமேஷ்வர தாஸ் என்பவரின் விவரம் மட்டும் வெளி வந்துள்ளது.  இவர் தனது 70 வயதுகளின் இடையில் உள்ளவர் ஆவர்.

இந்த இயக்கத்தின் பக்தரான அவர் இயக்கத்தில் 30 வருடங்களாக ஆன்மிகப் பணி செய்து வருகிறார்.

ராமேஷ்வர தாஸ் பிரிட்டனில் மட்டுமின்றி பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள இஸ்கான் கோவில்களில் திருப்பணி ஆற்றி உள்ளார்.   இங்குள்ள இந்தியர்கள் இவரை ஒரு தந்தையைப் போல் நினைத்து அன்பு செலுத்தி வருகின்றனர். ராமேஷ்வர தாசுக்கு மனைவி, மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளனர்.

மீதமுள்ள நால்வரின் ஒருவர் வயதானவர் எனவும் மற்றவர்கள் தங்கள் முப்பதாம் வயதுகளில் உள்ளவர்கள் எனவும் கூறப்படுகிறது. தற்போது தீவிர சோதனைகள் நடந்து வருவதால்  இஸ்கான் இயக்கத்தினரிடையே கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.