96 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நேரத்தில் பிரிட்டன் தேர்தல்! கட்சிகள், வாக்காளர்கள் அதிருப்தி

லண்டன்: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலமான டிசம்பரில் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் என்பது அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் ஒப்பந்தத்துக்கு பிரெக்சிட் ஒப்பந்தம் என்று பெயர். இது தொடர்பாக, இரு தரப்பிற்கும் இணக்கமாக ஒரு ஒப்பந்தம் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரேசா மே இறங்கினார்.

ஆனால் தமது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் தெரசா மே. அதன் பிறகு பதவியில் அமர்ந்தவர் போரிஸ் ஜான்சன். தெரசா மே பதவியை காவு வாங்கிய ஒப்பந்தத்தை செயல்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கினார்.

அக்டோபர் 31ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி விடும் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் அவரது வரைவை இம்மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் எம்பிக்கள் தோற்கடித்தனர்.

இதையடுத்து, மீண்டும் அவர் வாக்கெடுப்பை நடத்தினார். அதன்படி முன்கூட்டிய தேர்தல் நடத்தும் அவரது தீர்மானத்துக்கு ஆதரவாக, 438 எம்பிக்கள் வாக்களித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்து, 20 எம்பிக்களே வாக்களித்தனர். போரிஸ் ஜான்சனின் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைத்ததால், வரும் டிசம்பர் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.  1923ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தல் நடைபெறும் டிசம்பர் மாதம் என்பது பிரிட்டனை பொறுத்த வரை கிறிஸ்துமஸ் காலமாகும். வெகு விமரிசையாக கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால் இந்த முறை 1923க்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அதே கிறிஸ்துமஸ் காலத்தில் தான் நடைபெறுகிறது.

கிறிஸ்துமனுடன், கடும் குளிர் நிலவும் மாதம் டிசம்பர். கூடவே விடுமுறை காலம். ஆக ஒரே நேரத்தில் இத்தகைய முக்கிய சவால்களை அரசியல் கட்சியினர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அமைந்திருக்கிறது. இது ஒரு விதமான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.

அரசியல் கட்சிகள் தான் என்றில்லை, மக்களும் இந்த தேர்தல முடிவால் ஒருவித அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். வாக்காளர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, வாக்கு சேகரிப்பின் போது அது வெளிப்படும் என்றும் கருதப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால், கிறிஸ்துமஸ் காலத்தில் தேர்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் மனோ நிலையை இந்த பிரெக்சிட் ஒப்பந்தம் சூறையாடி விட்டது என்றே சொல்லலாம்.

கார்ட்டூன் கேலரி