லண்டன்: வரும் டிசம்பர் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தலாம் என்ற போரிஸ் ஜான்சனின் தீர்மானத்துக்கு 438 எம்பிக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் ஒப்பந்தத்து பிரெக்சிட் ஒப்பந்தம் என்று பெயர். இது தொடர்பாக, இரு தரப்பிற்கும் இணக்கமாக ஒரு ஒப்பந்தம் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரேசா மே இறங்கினார்.

ஆனால் தமது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் தெரசா மே. அதன் பிறகு பதவியில் அமர்ந்தவர் போரிஸ் ஜான்சன். தெரசா மே பதவியை காவு வாங்கிய ஒப்பந்தத்தை செயல்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கினார்.

அக்டோபர் 31ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி விடும் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் அவரது வரைவை இம்மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் எம்பிக்கள் தோற்கடித்தனர்.

இதையடுத்து, மீண்டும் அவர் வாக்கெடுப்பை நடத்தினார். அதன்படி முன்கூட்டிய தேர்தல் நடத்தும் அவரது தீர்மானத்துக்கு ஆதரவாக, 438 எம்பிக்கள் வாக்களித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்து, 20 எம்பிக்களே வாக்களித்தனர். போரிஸ் ஜான்சனின் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைத்ததால், வரும் டிசம்பர் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.  1923ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.