கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிரிட்டன் அரசி மற்றும் அவரது கணவர்!

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் அரசிக்கு தற்போது 94 வயதாகிறது மற்றும் அவரின் கணவர் இளவரசர் பிலப்பிற்கு 99 வயதாகிறது. இவர்கள் இருவரும் தற்போது கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டனில், குறைந்தபட்சம் 1 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தாவது எடுத்துக்கொண்ட 1.5 மில்லியன் மக்களில் இவர்களும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராணியின் குடும்ப மருத்துவர் இந்த தடுப்பு மருந்து டோஸ் செலுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா காரணமாக, ராணியும், அவரின் கணவரும், விண்ட்ஸர் கோட்டையில் தங்களின் நாட்களை கழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.