இந்தியர்களை குறிவைத்து பிரிட்டனில் கொள்ளை கும்பல் கைவரிசை!!

லண்டன்:

பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் டாங்க். இவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்கள் அவரது மனைவியின் தங்க நகைகளை மட்டுமே திருடி சென்றுள்ளனர். வேறு எதையுமே எடுக்கவில்லை.

சஞ்சய் மட்டுமல்ல அதே பகுதியில் உள்ள இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளை நடந்து வருகிறது என்று அப்பகுதி
கவுன்சிலர் எடித் பால்ட் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சமூகத்தை இலக்காகக் கொண்ட ஒரு வழக்கு அல்ல என்று போலீசார் கூறுகின்றனர்’’ என்றார்.

‘‘ஆனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 24 இந்திய குடும்பங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட அதிகமாகவும் மற்றும் மில்டன் கெய்ன்ஸின் சராசரியை விடவும் அதிகமானதாக உள்ளது’’ என்று கவுன்சிலர் தெரிவித்தார். மற்றொரு கவுன்சிலரான கீதா மோர்லா வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

1960ம் ஆண்டுகளில் மில்டன் கெய்ன்ஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்து, அங்கிருந்து லண்டனுக்கு வேலைக்கு சென்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளில், மில்டன் கெய்ன்ஸ் பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. இதில் பலர் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள். லெய்செஸ்டர், பர்மிங்காம், லண்டன் மற்றும் மான்செஸ்டர் போன்ற நகரங்களில் உள்ள இந்திய குடும்பங்கள் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எசெக்ஸ் காவல்துறை அதிகாரியான ஜிம் வொயிட் கூறுகையில், ‘‘ஆசிய பாரம்பரியத்தில் தங்க நகைகளுக்கு எப்போதும் ஒரு வலுவான முக்கியத்துவம் உண்டு. தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கமும் உள்ளது. மத விழாக்களில் தங்கம் முக்கியமான பங்கையும் வகிக்கிறது. அதில் பல பொருட்களை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைகின்றனர்” என்றார்.

கடந்த நிதியாண்டில் லண்டனில் உள்ள ஆசிய வீடுகளில் மட்டும் 50 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள நகைகள் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக 3,463 புகார்கள் உள்ளன. இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் நிலவும் ஒரு பிரச்சனையாகும். தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் எச்சரித்து வருகின்றனர்

மில்டன் கெய்ன்ஸின் குடியிருக்கும் ராபி சங்கர் சவுத்ரி என்பவர் தனது வீட்டின் பாதுகாப்பு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘எனது வீட்டில் எவராவது அனுமதியின்றி நுழைந்துவிட்டால் எச்சரிக்கை மணி அடித்து எனக்கு ஒரு அழைப்பு வரும்.

அதைத்தொடர்ந்து அந்த நபரின் புகைப்படமும் என்னை வந்து சேரும். கண்காணிப்பு நிலையத்திலிருந்து முதலில் என்னை அழைப்பார்கள். என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால், என் குடும்பத்திலுள்ள மற்றவர்களை அழைப்பார்கள்’’ என்றார்.