லண்டன்:

நாடு முழுவதும் வரும் 2021ம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாத கார்கள், மின்சார கார்களை அறிமுகம் செய்ய பிரிட்டன் அரசு 50 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 ஆயிரத்து 250 கோடியை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.

பிரிட்டன் நிதி அமைச்சர் ஃபில் ஹாமண்ட் இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார். இதில் டிரைவர் இல்லாத காருக்கான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 650 கோடி ஒதுக்கப்படும்.

நாடு முழுவதும் மின்சார கார் பேட்டரிகளுக்கு சார்ஜர்கள் அமைக்க ரூ. 2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2035-ம் ஆண்டுக்குள் பிரிட்டனில் பெட்ரோல், -டீசல் கார்களை முற்றிலுமாக நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டிரைவரில்லா கார் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படவுள்ளது. டிரைவரில்லா கார்களுக்கு அடிப்படையான 5ஜி தொலைத் தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று பிரிட்டன் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.