லண்டன்: யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளை கையாண்டதில் இருந்த பாரபட்சம் தொடர்பான அறிக்கைக்கு பதிலளித்தது தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவருமான ஜெரமி கோர்பின் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யூத எதிர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கையாண்டதில், லேபர் கட்சிக்குள் பாரபட்சம் இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த ஜெரமி கோர்பின், “அந்தப் பிரச்சினை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் மற்றும் மீடியாக்களால் மிகைப்படுத்தப்பட்டது” என்று கூறியிருந்தார்.
இவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம், இவர் தனது கருத்தை திரும்பப் பெற மறுத்த காரணத்தால், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாகவும், நாடாளுமன்ற கட்சியிலிருந்தும் நீக்குவதாகவும் லேபர் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நீக்கத்திற்கு, பெரிய அரசியல் தலையீடு இருப்பதாகவும், இனவெறிக்கு எதிரான நடவடிக்கையை தான் எப்போதும் ஆதரிப்பேன் என்றும் கூறியுள்ளார் ஜெரமி கோர்பின்.