நியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு(CDC) அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.

இந்த உருமாறிய வைரஸ், முந்தைய கொரோனா வைரஸைவிட, எளிதில் விரைந்து பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது மற்றும் இந்தாண்டின் துவக்க மாதங்களில் இதன் பரவல் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

அதாவது, முந்தைய வைரஸைவிட, கூடுதலாக பாதியளவிற்கு அதிகம் பரவக்கூடியதாக இருக்கிறது இந்த வைரஸ். அமெரிக்காவில், அடுத்த இரண்டு மாதங்களில், அதிகளவிலான மக்களை, இந்தப் புதியவகை வைரஸ் தொற்றும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதியவகை வைரஸுக்கு B.1.1.7 என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் இது முதன்முதலாக பிரிட்டனில்தான் கண்டறியப்பட்டது. தற்போதுவரை, இந்த வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.