அகமதியா இயக்கம் குறித்த அவதூறுக்காக பிரிட்டன் சேனலுக்கு அபராதம்

லண்டன்: அகமதியா முஸ்லீம் சமூகம் குறித்த ஒரு வெறுப்பான உரையாடலை ஒளிபரப்பியதற்காக, பிரிட்டனின் ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு 75,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

‘சேனல் 44’ எனும் பெயர்கொண்ட உருது மொழி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ஒருவர், அகமதியா முஸ்லீம்களைப் பற்றி மிகவும் மோசமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அகமதியா சமூகத்தினர், கொலை செய்தல், தீவிரவாத நடவடிக்கைகள், சதி செயல்கள் மற்றும் அரசியல் கொலை ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்த நபர் குற்றம் சாட்டினார்.

மேலும், கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதியில் வடஇந்தியாவில் தோன்றிய அகமதியா இயக்கம், அடிப்படைவாத இஸ்லாமியர்களின் பணத்தின் மூலம் பாகிஸ்தானில் செல்வாக்குப் பெற்றது என்றும் அந்த நபர் கூறினார்.

தனது உலகளாவிய தலைமையகத்தை முதலில் பாகிஸ்தானில் வைத்திருந்த அந்த இயக்கம், பின்னர் தனக்கெதிராக நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து, தெற்கு லண்டன் பகுதிக்கு தனது உலக தலைமையகத்தை மாற்றிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி