ராமநாதபுரம்: கடந்த 1964ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை புயல் தாக்கி அழித்தபோது, கடலில் மூழ்கிப்போன முக்கிய சாலை ஒன்று, கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியே தெரிந்துள்ளது.

கடந்த 1964ம் ஆண்டு புயலின்போது, தனுஷ்கோடியில் கடல் உட்புகுந்து அங்கே வாழ்ந்த மக்களெல்லாம் மாண்டுபோன பிறகு, அதை ‘பேய் நகரம்’ என்றே அழைக்கிறார்கள். சில சிதைந்த கட்டடங்கள் மட்டுமே அழிவின் சாட்சியாக அப்பகுதியில் இன்றும் உள்ளன.

இப்படியிருக்கையில்தான், பக்கவாட்டு குழாய்களையும், அதற்கு ஏதுவான பக்கச் சுவர்களையும் கொண்ட சாலை ஒன்று தற்போது, கடலிலிருந்து மீண்டும் வெளியே வந்துள்ளது. இந்த சாலை கடந்த 1900ம் ஆண்டுகளில் துவக்கத்தில், மக்கள் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை அடைவதற்காக போடப்பட்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் ஈழத்திலிருந்து படகு பிடித்து தனுஷ்கோடி வருவோர், இந்த ரயில் நிலையத்திற்கு வந்து ரயில் பிடித்து சென்னை செல்வர். இந்த ரயில் சேவை தினசரி சேவையாகும்.

ஆனால், கடந்த 1964ம் ஆண்டு புயலில், இந்த சாலையை கடல் விழுங்கிவிட்டது. தற்போது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கழித்து அந்த சாலையை மீண்டும் வெளியுலகிற்கு காட்டியுள்ளது கடல்.