சென்னை:

மிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட கிணறுகள் காரணமாக தண்ணீர் பிரச்சினை சமாளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுமார் 700 பேர் தினமும் வேலை செய்யும் டிஜிபி அலுவலகத்தின் அனைத்து தண்ணீர் தேவைகளையும் அங்குள்ள கிணறுகள் பூர்த்தி செய்கின்றன.

நூற்றாண்டுகளை கடந்து இன்னும் வெள்ளைவெளேர் வண்ணத்துடன் காட்சி அளிக்கிறது சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம். பாரம்பரியம் மிக்க இந்த கட்டித்தில் காவல்துறை தொடர்பான அனைத்து அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 700 பேர் அங்கு பணிக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு தண்ணீர் பிரச்சனை தலை தூக்க வில்லை.

ஊரெல்லாம் தண்ணீருக்காக அடிச்சுக்கும்போது டிஜிபி அலுவலகத்தில் மட்டும் தண்ணீர் பிரச்சனை எழாமல் உள்ளது. இதற்கு காரணம், பிரிட்டிஷ் காலத்தில் அங்கு தோண்டப்பட்ட 5 கிணறுகள் என்று கூறுகின்றனர். பல ஏக்கர் பரப்பளவிலான டிஜிபி அலுவலகத்தல் ஆங்காங்கே 5 திறந்தவெளி கிணறுகள் உள்ளன. அந்த கிணறுகள் இன்றளவும் அலுவலகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு தேவையான சுமார் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை இந்த கிணறுகள் வாரி வழங்குகின்றன.

இங்குள்ள ஒவ்வொரு கிணறும் 40 ஆழமும் 15 முதல் 20 அடி விட்டமும் கொண்டதாக உள்ளது. இங்கு கிணறுகள் இருப்பது பெரும்பாலானோருக்கு இதுவரை தெரியாது என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1865ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஆரம்ப காலத்தில் லாட்ஜ் ஆகவே இருந்தது என்றும் அப்போது தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்ட கிணறுகள்தான், கடுமையான கோடை காலங்கள் உள்பட இன்றளவும் டிஜிபி அலுவலகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது….