கடந்த 1943ம் ஆண்டு இந்தியாவின் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட 30 லட்சம் பேரை பலிகொண்ட கொடும் பஞ்சத்திற்கு வறட்சி காரணமில்லை எனவும், பிரிட்டிஷ் அரசின் மோசமான கொள்கைகள்தான் காரணம் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1873 – 74, 1876, 1877, 1896 – 97, 1899 மற்றும் 1943 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் பல லட்சம் மக்களை பலிகொண்ட கொடூர பஞ்சங்கள் தலைவிரித்தாடின. ஆனால், இவற்றுள் 1943 தவிர, இதர பஞ்சங்கள் போதிய மழைப் பொழிவின்மை உள்ளிட்ட வறட்சிக் காரணங்களால் நிகழ்ந்தவை.

இந்த 1943ம் ஆண்டு பஞ்சத்தில் மட்டும் மொத்தம் 30 லட்சம் மக்கள் மாண்டுபோனதாக அதிர்ச்சிகரமான விபரங்கள் பகிரப்படுகின்றன. 1943ம் ஆண்டு சமயத்தில், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது.

எனவே, நாட்டிற்கு தேவையான அரிசி இறக்குமதியை அலட்சியம் செய்து, அனைத்து செலவினங்களையும் ராணுவத்தின் பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருந்தது வின்ஸ்டன் சர்ச்சில் தலைமை வகித்த பிரிட்டிஷ் அரசு.

மேலும், பர்மாவை ஜப்பானியப் படைகள் கைப்பற்றியவுடன், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் தடைபட்டுப் போனது. இத்தகைய காரணங்களால்தான், மக்கள் கடுமையான பஞ்சத்தை சந்தித்து மாண்டு போயினர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த 1943ம் ஆண்டில், மண்ணின் ஈரப்பதம் அதிகமாகவே இருந்தது என்றும், மழைப்பொழிவும் சராசரியைவிட அதிகமாகவே இருந்தது என்றும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் வியாபாரிகளால் கைப்பற்றப்பட்ட இந்தியாவில், வேளாண்ட உள்பட பல மக்கள் நல நடவடிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன என்பதை வரலாற்றில் நாம் அறிவோம்.

– மதுரை மாயாண்டி