இந்தியாவில் இருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்றது எவ்வளவு? பொருளாதார நிபுணர் தரும் அதிர்ச்சி தகவல்

--

டில்லி:

சுமார் 200 ஆண்டுகளாக பிரிட்டன் இந்தியாவை ஆட்சி செய்த காலகட்டத்தில் இந்தியர்கள் கடுமையான வறுமை, பஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்திய நாட்டின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, நாட்டுக்குக் கொண்டு சென்ற பிரிட்டிஷார் தங்களை செழுமையாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பு தகவல்களை பிரபல பொருளாதார நிபுணர் தெரிவித்து உள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் தாக்கல் செய்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்தியாவில் பிரிட்டிசார் ஆண்ட காலக்கட்டம் பற்றி தெரிவித்து உள்ளார்.

அதில், பிரிட்டிசார் இந்தியாவை ஆண்ட காலங்களின்போது இந்தியாவின் செல்வ வளத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறி உள்ளார். இந்தியாவில் இருந்து அவர்கள் அள்ளிச் சென்ற செல்வங்கள் மூலம் பிரிட்டிஷ் நாடு தங்களை செழுமையாக வளர்த்த்துக்கொண்டது என்று குற்றம் சாட்டி உள்ளவர்,  அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட வளங்கள் நமது நாட்டிலேயே இருந்திருந்தால் இந்தியா தற்போது சுகாதாரத்திலும், சமூக நலன்களிலும் மிகவும் சிறந்த வகையில் முன்னேறியிருக்கும் என கூறி உள்ளார்.

இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேறி 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், காலனி ஆதிக்கத்தின் வடுக்கள் இன்னமும் இருப்பதாக தெரிவித்துள்ளவர்,  1765 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வளங்களைச் சுரண்டி, அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்ற செல்வத்தின் மதிப்பு ஏறக்குறைய 9.2 டிரில்லியன் பவுண்டுகள் (45 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்ற அதிர்ச்சி தகவல்களையும் தெரிவித்து உள்ளார்.

பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக்

நாட்டின் தனிநபர் வருமானம், 1900 முதல் 1945-46 வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஒரே சீராக இருந்தது. 1900-02ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ. 196.1 ஆக இருந்தது. அதே நேரத்தில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, அதாவது 1945-46ல், தனி நபர் வருமானம் வெறும் 201.9 ரூபாயாக இருந்தது. இந்த காலகட்டத்தில், தனிநபர் வருமானம் அதிகபட்சமாக ரூ 223.8 ஆக உயர்ந்தது 1930-32 ஆம் ஆண்டுகளில்தான் என்று கணக்கிட்டு கூறிய உள்ளவர்,  இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும், மத்திய அரசின் பட்ஜெட்டின் 26-36% சதவிகிதத்திற்கும் ஈடான செல்வதை இங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடையப்போகும் காலக்கட்டத்தில் இந்தியாவின் நிலை அனைத்து சமூக காரணிகளிலும் படுமோசமாக இருந்தது என்று தெரிவித்துள்ள உட்ஸா பட்நாயக், பிரிட்டிசார் கொள்ளையடித்துச் சென்ற  செல்வங்கள்அனைத்தும் இந்தியாவிலேயே இருந்திருந்தால், இந்தியா ‘வளர்ந்த’ தேசமாக  பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணரான உட்ஸா பட்நாயக் காலனி இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே யான நிதியியல் உறவுகள் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.