இந்த சீசனில் 6வது பட்டம் வென்ற கார்பந்தய நட்சத்திரம் ஹாமில்டன்!

ரோம்: இத்தாலியின் டஸ்கன் நகரில் நடைபெற்ற நடப்பாண்டின் 9வது கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார்ப்பந்தயத்தில், பிரிட்டனின் ஹாமில்டன் பட்டம் வென்றார்.

இந்த சீசனில் இவர் பெறுகின்ற 6வது பட்டமாகும் இது. மொத்தம் 10 அணிகள் மற்றும் 20 வீரர்கள் பங்கேற்றனர் இப்போட்டியில்.

மொத்தம் 309.497 கி.மீ. நீளம் கொண்ட பந்தய தூரத்தை இரண்டு மணிநேரம் 19 நிமிடம் 35.060 வினாடியில் கடந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன்.

இவர், மொத்தமாக இதுவரை 90 சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் 1 பட்டத்தைக் கைப்பற்றினால், ஜெர்மனியின் மைக்கேல் சூமேக்கர்(91 பட்டம்) சாதனையை சமன் செய்யலாம்.