சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை: அரசு அதிரடி உத்தரவு

சென்னை,

மிழகத்தில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் அத்துமீறில் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

இதைத்தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை விதிப்பதாக பதிவுத்துறை தலைவர் அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் வரும் மார்ச் மாதம் முதல் இந்த தடை  அமலுக்கு வருவதாகவும் மீறி நுழைப்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ மற்றும்,  வில்லங்க சான்றிதழ்  திருமண பதிவு போன்ற பல்வேறு பணிகள் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பெரும்பாலும், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளே உள்ள இடைத்தரகர்கள் மூலமே நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் நேரடியாக ஏதாவது சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ எண்ணி அதை பதிவு செய்ய முயன்றால், அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்கள் பதிவு செய்ய மறுத்து இடைத்தரகர்களையே நாட அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நிதி மன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்றபோது, இடைத்தரகர்களை தடுக்க அரசு நடவடிக்கை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில், வரும் மார்ச் மாதம் முதல் சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்துக்களை வாங்குபவர், விற்பவர் தவிர மற்றவர்கள் உள்நுழைய கூடாது என  உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி இடைத்தரகர்கள் தலையிட்டதாக புகார் எழுந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.