கருணாநிதிக்கு மார்பளவு வெண்கல சிலை: மு.க.ஸ்டாலின் திறந்தார்….

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மார்பளவு  வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள  திமுகழக அலுவலகத்தில் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள  கலைஞர் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

இந்த சிலை வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல் 5 அடி உயர கிரானைட் தூண் மீது அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னணி தலைவர்கள், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதேபோல், சைதாப்பேட்டை தொகுதியில் பஜார் சாலையில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.