மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை: மு.க.அழகிரி
சென்னை:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்கப்படும் என்றும் மு.க.அழகிரி கூறி உள்ளார். மேலும், தொண்டர்களை மீண்டும் சந்தித்து பேசுவேன் என்றும் தெரிவித்து உள்ளார்.
திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் மு.க.அழகிரி கடந்த 5ந்தேதி, திமுக தலைமைக்கு எதிராக கருணா நிதி அமைதி பேரணியாக நடத்தி காட்டினார். இதில் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என அறிவித்திருந்த நிலையில் சுமார் 10 சதவிகிதம் பேரே கலந்துகொண்டனர். இதனால் அப்செட்டான அழகிரி, பேரணி முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்.
இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இப்போதுதான் பேரணி முடிந்து இருக்கிறது என்றவர், விரைவில் தொண்டர்களை மீண்டும் சந்தித்து பேசுவேன் என்று கூறினார். பேரணி நடைபெற்றது குறித்து என் ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவித்தவர், மீண்டும் ஆதவாளர்களிடம் பேசும் திட்டத்தில் இருப்பதாக அழகிரி கூறியுள்ளார்.
மேலும், திமுக தலைவர் மறைந்த கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறியவர், மதுரை பால்பண்ணையில் சிலை வைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சிலை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, வெண்கலத்தில் கருணாநிதி சிலை வைக்கப்படும் என்றவர், ஆனால் சிலையின் உயரம் தோற்றம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்யவில்லை. மிகவும் பெரிய அளவில் தத்ரூப மாக சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.