Random image

3 பாதுகாப்பு வீரர்களின் சகோதரரை சுட்டுக் கொன்ற காஷ்மீர் பாதுகாப்பு படை

டிரிகாம், காஷ்மீர்

காஷ்மீர் பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இளைஞரின் 3 சகோதரர்கள் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆவார்கள்

காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் டிரிகாம் ஆகும்.   இங்கு வசிக்கும்  ஆசிஃப், வாசிம் மற்றும் தாலிப் ஹுசைன் ஆகிய 3 சகோதரர்களும் இந்தியப் பாதுகாப்புப் படையில் பணி புரிகின்றனர்.    அனைவரும் தங்கள் தாய் மாநிலமான காஷ்மீர் மாநிலத்தில் காவல் படையினராக பணி புரிந்து வருகின்றனர்.   இவர்களின் தம்பி கலீல் என்பவர் அதே கிராமத்தில் ஒரு கடையை நடத்தி வருகிறார்.

அந்த கிராமத்தில் கல்லெறி தாக்குதல் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளது.  சம்பவத்தன்று திடீரென கல்லெறி தாக்குதல் நடைபெற்றதால் பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.  கலவரத்தைக் கண்ட கலீல் அருகில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக கடையை மூடி உள்ளார்.   அப்போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டு பட்டு கலீல் மரணம் அடைந்துள்ளார்.

தம்பி கொல்லப்பட்ட போதிலும் நாட்டுப் பற்றை மறக்காத அந்த சகோதரர்கள்  இந்த தவறை செய்த படையினரை அரசு நிச்சயம் தண்டிக்கும் என தாங்கள் நம்புவதாகவும்  இந்திய ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் நீதியின் மீது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநில பாதுகாப்புப் படை இறந்த கலீலுக்கு இரக்கம் தெரிவித்துள்ளது.  மேலும் இது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.   உள்ளுர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் பதியப்பட்டுள்ளது.