நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அடிக்கடி கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சாதிக்கொலைகள், முன்விரோத கொலைகள் போன்றவை அதிக அளவில் நடைபெறும் மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது.

வெட்டி கொல்லப்பட்டவர்கள்
                                          வெட்டி கொல்லப்பட்டவர்கள்

இன்று மதியம் சுமார் 11.30 மணி அளவில் திருநெல்வேலி அருகில் உள்ள வீரவநல்லூர் பஸ் நிலையதில் அரசு பஸ் ஒன்று வந்து நின்று பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டு இருந்தது. அப்போது ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பஸ்சுக்குள் ஏறி  பஸ்சில் பயணம் செய்து வந்த 2 இளைஞர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதை நேரில் கண்ட மற்ற பஸ் பயணிகள்  மற்றும் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். உடனடியாக பஸ் நிலையத்திற்குள் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக பஸ் நிலையம் வந்து இருவரின் உடலையும்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் வெட்டி கொல்லப்பட்ட இருவரின் பெயரும் மாரியப்பன், பாலசுப்பிரமணியன் என தெரிய வந்துள்ளது. இருவரும் அண்ணன் தம்பியாகும். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஸ்ரீபத்மநல்லூரை சேர்ந்த விவசாயிகள் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணப்பனுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, கண்ணப்பனை மாரியப்பன், சுப்பிரமணியன் இருவரும் சேர்ந்து வெட்டி கொன்றுள்ளனர். இந்த கொலை சம்பந்தமாக இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
தற்போது சேரன்மகாதேவி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக பஸ்சில் சேரன்மகாதேவி சென்றபோது, வழியில் வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் பஸ் நின்றது, அப்போது பஸ்சை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல பஸ்சுக்குள் புகுந்து மாரியப்பன், சுப்பிரமணி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
முன்விரோதம் காரணமாக   பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக  அந்த பகுதி மற்றும் முக்கூடல், சேரன்மகாதேவி போன்ற பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என பொதுமக்கள் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.   போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.